ஞாயிறு, 20 ஜனவரி, 2013



இசை ஞானப் பேரரசு

நாகர்கள் கையாண்ட கருவியை நாதஸ்வரம் என்று கூறுவார்கள்.   திருச்சின்னம் என்னும் ஊதுகுழல் இன்றும் மடாலயங்களில் இருக்கிறது. இது ஒரு ஒலிக்கருவி. இறைவன் வருவதையும், மடாலயத் தலைவர்கள் வருவதையும் முன்னறிவிப்பதற்காக இதனை வாசிப்பார்கள். தமிழகத்தின் தொன்மையான இசைக்கருவிகளில் நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் பங்கு உண்டு. இறைவன்முன் நாள்தோறும் இது வாசிக்கப்படுவதால் இது மங்கள இசை எனும் பெயர்பெற்றது. திருச்சின்னம் போலவே நாத சின்னத்தை உருவாக்கினார்கள். நாதச் சின்னம் நாயனமாகியது. நாயனம் என்றும் இப்பொழுதும் அன்பாக அழைப்புதுண்டு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பொன்னுசாமி நாயனக்காரர் சிவக்கொழுந்து நாயனக்காரர் என்றுதான் சிறப்பித்து அழைப்பார்கள். நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுடைய கதையைக் கேட்கும்போது சிவக்கொழந்து நாயனக்காரர் என்று குறிப்பிடுவதை நான் கேட்டுருக்கிறேன். பழைய புத்தகங்களில் சரம் என்று உள்ளது.

இசைக்கோவையைத் தொடுப்பதை ஒருக்கால் சரம் என்று சொல்லியிருக்கலாம். பிறகு அது சுரம் என்று மாறியிருக்கலாம். நாகசரம் பிற்காலத்தில் நாத சுரமாக மருவியிருக்கக் கூடும்.  வாழையடி வாழையாக நாதஸ்வர வித்வான்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இது குலத் தொழிலாகவும் இருந்திருக்கிறது. சின்ன மேளம், பெரிய மேளம் என்று முன்னால் சொல்வார்கள்.

“எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கும்” என்ற திருவாசக வார்த்தையை நாம் கேட்டிருக்கிறோம்.  “எழில்” ஏழ ஸ்வரத் துளைகள் உடைய நாதஸ்வரம். எழில் என்ற சொல் நாதஸ்வரத்தையேக் குறிக்கும் என்று நினைக்கிறேன்.

பாணர்கள் இசையுடன் தொடர்புடையவர்கள். பாணர் இயற்றிய துயில் எடை நிலை என்று தொல்காப்பியத்தில் ஒரு துறை வருகிறது. மன்னார்கள் அதிகாலையில் எழுந்து அன்றைய காரியங்களை படுக்கையில் இருந்தபடியே சிந்திப்பார்கள் என்று இதன் பொருள்.

நாதஸ்வர ஞானம் கர்நாடக சங்கீதத்திற்கு அடிப்படை. நாதஸ்வரம் இருந்தால்தான் திருமணம் களை கட்டுகிறது.  டிண்டிமம் என்று ஒரு வடமொழி சொல் உண்டு. இதை தவிலுடன் ஒப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் இதற்கு எமபேரி என்ற பெயர் உள்ளது. ஆகமங்களில் மட்டுகம் என்ற வார்த்தை காணப்படுகிறது. இனி விஷயத்துக்கு வருவோம். 

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் வள்ளியூர். திருப்புகழில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்  வள்ளியைப் புணர்ந்த மணவாளா  என்பது அந்த பாடல். 
இந்த கட்டுரையின் கதாநாயகன் வள்ளியூர் ராசுக்குட்டி. வள்ளியூரில் வசித்து வருகிறார். வயது 60 இருக்கும். இவர் ஒரு நாதஸ்வர வித்வான். 

நமது கதாநாயகன் மற்ற நாதஸ்வரகாரர்களைவிட சிறப்பம்சம் வாய்ந்தவர். இவர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றதில்லை. ஆனால் இன்று உலகளவில் இவருக்கு இணையாக சினிமா பாட்டு வாசிப்பதில் கைதேர்ந்தவர்  யாரும் இல்லை. வள்ளியூர் ராசுக்குட்டி என்று சொன்னால் அவருக்கென்று ஒரு பெயர், புகழ், மிக மெலிந்த தேகம். அவரது எடை 35 கிலோவுக்கு மேல் இருந்தால் அது ஆச்சரியம். சாமி சாமி என்று கனிந்து குழைந்து எப்பொழுதும் பேசுவார். அவருடன் எனக்கு சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவம். தவில் வித்வான் நாஞ்சில் மணிகண்டன் ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தபொழுது டாக்டர், நீங்கள் ராசுக்குட்டி மேளம் கேட்டுருக்கிறீர்களா என்று கேட்டார் நான் இல்லை என்று சொன்னவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டு வாழ்க்கையில் கேட்க வேண்டிய ஒரு மேளம், நீங்கள் கேட்காதது மிகப்பெரிய தவறு என்று சொல்லி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஈசாந்திமங்கலம் கோவிலில் கொடையில் நடந்த இரவு போட்டி மேளத்திற்கு என்னை அழைத்துச்  சென்றார் பொதுவாக நான் கொடை நடக்கும் கோவில்களுக்கு செல்வதில்லை. திரு. மணிகண்டனின் கட்டாயத்தாலும், அன்புக் கட்டளையை மீற முடியாததாலும் அன்று நான் ஈசாந்திமங்கலம் சென்றேன்.  அங்கு அன்பர் ராமதாஸும் வந்திருந்தார். நாஞ்சில் மணிகண்டன் எனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கம். மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வருவார். சேர்ந்து நாதஸ்வரம் கேட்போம், தவில் சொற்களைப் பற்றி பேசுவோம். எனது உபநயனத்திற்கு மணிகண்டன் தவில் வாசித்தார். அப்போது எனக்கு வயது 10 இருக்கும். வள்ளியூர் ராசுக்குட்டியை அறிமுகம் செய்து வைத்தபோது மிகவும் அன்பாகப் பேசினார். என்னை நன்றாகத் தெரியும்  என்று கூறினார்.

“மன்னவன் வந்தானடி” என்ற பாடலை அவர் வாசித்தார். காருக்குறிச்சி தவிர வேறு யாருக்கும் தலைவணங்காத எனது தலை முதன்முதலாக அன்று அவருடைய வாசிப்புக்கு வணங்கியது. அப்படிப்பட்ட ஒரு வாசிப்பு. ஒப்பாரும், மிக்காரும் இலர், என்று சொல்லும்படியான வாசிப்பு. அதன்பிறகு “பல்லாண்டு வாழ்க, “அக்கரை சீமை அழகினிலே, போன்ற பாடல்களை மிகத் தத்ருபமாக வாசித்தார். இப்படியும் ஒருவர் வாசிக்க முடியுமா என்கின்ற அளவுக்கு வாசிப்பு இருந்தது. மெலிந்த உருவம், குள்ளமான உருவம். அப்படியே பின்னோக்கி வளைந்தார், நாதஸ்வரத்தை மெலே சுழற்றினார். இரண்டு பக்கமும் சுழற்றி சுழன்று சுழன்று பாம்பைப் போல் வளைந்து வாசித்தார். மருத்துவ ரீதியாக இதை  Lumbar flexion, extension, lateral bending, rotation  என்று குறிப்பிடுவோம். அத்தனை அசைவுகளுக்கும் அந்த தண்டுவடம் ஈடுகொடுத்தது. மிகப் பழைய நாதஸ்வரம். அதில் ராஜரத்தினம் பிள்ளையுடைய படமும், காருக்குறிச்சியார் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. 

நீண்ட தேடுதலுக்குப் பிறகு காருக்குறிச்சியின் மகளின் நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா பழனியில் இருந்தார்.  ஒருமுறை காருக்குறிச்சியார், விழாவை பழனியில் நடத்தி திருநெல்வேலி திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நாதஸ்வரம் பரிசாக அளித்தோம். தூரதிர்ஷ்டவசமாக அந்த அம்மா இறந்து விட்டார்கள். காருக்குறிச்சியின் வாசிப்பை சொல்ல வேண்டுமென்றால் அதில் ஒரு சுகம். மினர்வா தியேட்டரில் காருக்குறிச்சி வாசித்த நடபைரவி ஒலிப்பேழையில் நான் கேட்டிருக்கிறேன். நடபைரவி என்றால் அதுதான் நடபைரவி. பெரிய பெரிய நாதஸ்வர வித்வான்கள் ராசுக்குட்டியின் பாட்டை விரும்பி கேட்பார்கள். எந்த பாட்டைக் கேட்டாலும் ராசுக்குட்டி அதை அப்படியே வாசித்து விடுவார். ஸ்ருதியே போகாது. குழல் தேனினும் இனிமையாக இருக்கும். ஒருமுறை சிவானந்த ஆசிரமத்திற்கு வெளிநாட்டினர் முன்பாக வாசிப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் ஏதோ ஒரு டியூனைக் கூறினார்கள். அதனைக் கேட்டு உடனே அப்படியே வாசித்து விட்டார். அவர்கள் அந்த ஞானத்தைக் கண்டு மெய்மறந்து போனார்கள். தொடர்ந்து ராசுக்குட்டியின் இசையை நான் கேட்டு வந்தேன். அவரை வைத்து ஒரு சிடி வெளியிட்டு அன்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வந்தேன். என்ன என்ன ராகங்கள் எனக்கு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.

கீரவாணி, ஸ்ரீ ரஞ்சனி, காபி, சிந்துபைரவி, போன்ற பாடல்கள் நான் விரும்பி கேட்பேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை வடசேரிக்கு அவரது கச்சேரிக்கு நான் சென்றிருந்தேன். கல்யாண வசந்தத்தை அவர் மிக அற்புதமாக ஆலாபனை செய்தார். கண்களிலிலிருந்து கண்ணீர் வந்தது. ஒரு நாட்டுப்புறக் கலைஞருக்கு இது சாத்தியமே இல்லை. அதை முடித்து விட்டு “காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்” என்ற பாட்டு வாசித்து அதில் சுரம் வாசித்தார். இதனைக் கேட்டு நான் வேறு உலகத்தில்  சஞ்சரித்தென் என்று சொன்னால் அது மிகையாகாது. 

ராசுக்குட்டிக்கு தீர்த்தபானம் செய்யும் பழக்கம் உண்டு. அவருக்குப் பின்னால் ஒரு பையன் எதுவும் பேசாமல் இருப்பான். ஒரு சொம்பை கையில் வைத்துக் கொண்டு இருப்பான். அதிலிருந்து பிரஸாதத்தை அழக்கடிக்  கொடுத்துக் கொண்டே இருப்பான். மருந்து சாப்பிடும் பழக்கமும் ராசுக்குட்டிக்கு உண்டு. இவ்வளவு பழக்கங்களும் இருக்கிறதே என்று சொல்லி ராசுக்குட்டியை ஒரு நாள் வரவழைத்து அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் செய்தேன். எல்லாமே சீராக இருந்தது. இது ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். 

ஒருமுறை எங்கள் ஊர் ஸ்ரீ தரநங்கையம்மன் காளிபவூட்டு விழாவில் ராசுக்குட்டி வாசிக்க ஏற்பாடு செய்திருந்தேன். வருகின்ற வழியில் மருந்தின் தன்மை காரணமாக ஒரு ஓடையில் விழந்து  Maxillary bone உடைந்து விட்டது. சற்று நேரத்திற்கு ஒரு மருத்துவமனையில் படுக்க வைத்திருந்தேன்.  மனோ தைரியத்தில் வந்து இரண்டு பாட்டு வாசித்துவிட்டார். மறுநாள் காலை கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு மாதம் கழிந்து மீண்டும் புத்துயிர் பெற்று இன்றும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ வித்வான்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பேருக்கு விருது கிடைக்கிறது. வள்ளியூர் ராசுக்குட்டிக்குத் தேவையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெரிதாக அவர் எதுவும் சம்பாதிக்கவும் வில்லை. இதுதான் விதி. தலையெழுத்து என்று சொல்வதைத் தவிர வெறொன்றும் இல்லை.  இவருடைய பாட்டு கேட்பதற்காகவே ஒரு கூட்டம் வரும். 

நாதஸ்வர கலைஞர்கள் பல சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தவில்காரர்களை சிறுவர்கள் கூட மேளக்காரன் போறான் என்று சொல்கின்ற நிலை இருந்திருக்கிறது. 
இவர் எந்த வழி பொழிகிறாரோ அந்த வழி நாயனம் வரும். நாயனம் போகின்ற வழி அவர் வருவார். இப்படி ஒரு மனப்பொருத்தம். ஒற்றுமை அலாதி. துளைகளை அடைப்பதும் பிடுங்கி எடுப்பதுமாக விரல்களுக்கு ஓய்வே கிடையாது. 

இவருக்கு ஒரு சில கீர்த்தனைகளும் தெரியும். இவர் சீவாளியை நாதஸ்வரத்தில் பொருத்தி ஸ்ருதி சேர்த்த உடனேயே பாட்டுக்கள்  கொட்ட ஆரம்பித்துவிடும். இவர் யாரைக் கண்டும் பயந்ததில்லை. எந்தப் பாட்டையும் வாசித்து விடுவார். புதுப்பாட்டு சிடியைக் கேட்டால் உடனேஅதை வாசித்து விடுவார். இவர் சாதகம் செய்வது பற்றி எனக்குத் தெரியாது. சாதகமே தேவையில்லை. அது முற்பிறவியின் உழைப்பாலோ, புண்ணியத்தாலோ அவசியமின்றி கைதேர்ந்ததாகிவிட்டது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் அதனை அப்படியே வாசித்து விடுவார். நீண்ட நேர பிருகாக்களை அவரால் பொழிய முடியும். அது மிகப் பெரும் திறமையாகும். இந்த இசையில் கட்டுண்ட நாகம்போல், சிலைபொல் மயங்கி நின்ற பாமரர்களை நான் கண்டிருக்கிறேன். தேன்மழை பொழிவது என்பது இதுதான் என்றுமே நடக்கும் விஷயம்.

நாதஸ்வரத்திற்கென்றே சில வாசிப்பு முறைகள் உண்டு.  துத்துக்காரம், தன்னக்காரம், அகாரம், பிருகா, விரலடி போன்றவை.

காருக்குறிச்சிக்குப் பின்பு விரலடி வாசிப்பதில் இவர் திறமைசாலி. ராக ஆலாபனையிலும் இவர் வல்லவர்.  பல்லவி போன்றவற்றை இவர் கையாள்வதில்லை. மேல்காலத்தில் வாசிப்பதில் ஞானம். இவரது வாசிப்பைக் கேட்க சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து கூடுகிறார்கள். வள்ளியூரில் பிராமணர்கள் கொடை நடத்துவார்கள். அதில் இவர் வாசிப்பதைக் கேட்பதற்கு ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் கேட்க வருவார்கள். விடிய விடிய வாசிப்பார். 8 முதல் 9 மணி நேரம் வரை வாசிப்பார். அந்த சமயத்தில் அசுரனாகிவிடுவார். இவ்வளவு இருந்தும் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றும் வள்ளியூர் சென்றால் கோவிலுக்கு முன்னே சிறு துண்டைக் கட்டிக் கொண்டு ஒரு நாய்க்குட்டியை கையில் பிடித்துக் கொண்டு இவர் உலா வருவதைக் காணலாம். ஒரு அழுக்குத் துணியில் இவருடைய நாதஸ்வரம் வீட்டுக்குள் இருக்கும். அடுத்த கச்சேரிக்கு தேதி குறிப்பிடப்படாமல் இருக்கும். இதுதான் இந்த மஹா ஞானியான வித்வானின் கதை, மக்கள் அவருக்குக் கொடுத்த அங்கீகாரம்.