செவ்வாய், 4 ஜூன், 2013

திரிதோஷ தத்துவ மரபில் நவீன விஞ்ஞானத்தின் (மருத்துவத்தின்) தன்மைகளை உள்வாங்குவதில் உள்ள ஆதரவும் எதிர்ப்பும்

பிப்ருவரி 14 - டாக்டர். பி. வைத்தியநாதன் சார் நினைவு நாள் கட்டுரை 

     திரிதோஷ தத்துவ மரபை ஏற்றுக் கொள்வதில் மேலை நாட்டு மருத்துவர்களுக்கும், நமது நாட்டில் வாழ்கின்ற ஆங்கில மருத்துவத்தை விதிவசத்தால் படித்த ஒரு சில மருத்துவர்களுக்கும், ஒரு அகத் தடை இருந்து கொண்டெ இருக்கிறது. வாத, பித்த, கபங்கள் என்று ஒன்றும் இல்லை, என்றும் இவை வெறும் சொற்றொடர்கள் மட்டுமே என்று மெய்ஞானம் பெறாமல்  சொல்பவர்கள் உண்டு.

இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய மருத்துவ இயலில் முக்குற்ற மெய்ஞானம், தனக்கென்று உள்ள சத்திய நிலையை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. திரிதோஷ அடிப்படையில் உள்ள நம் பாரத நாட்டு மருத்துவம் நவீன பார்வையிலிருந்து வேறுபட்டது என்பது ஏற்கப்பட்டு வருகிறது. இந்த தனித்தன்மைதான் என்ன? மேலைநாட்டு மருத்துவத்துறை பிரபஞ்சத்தையும், அக வாழ்க்கையையும் விட்டு வெளியேறி உடல் சார்ந்த நோய்களை மட்டும் நிழற்படங்கள் மூலம் வரையறுத்து சிகிச்சை செய்து கொண்டிருந்தது (ஒரு நிலை வரை இது தேவை என்றே நான் கருதுகிறேன்). 

  இக்காலமானது மாறி, வெளி நம்பிக்கையை மட்டும் சாராமல் மருத்துவம் என்பது இறையியல் மற்றும் அறவியல் இவற்றிலிருந்து பிரிக்க முடியாத, மற்றும்  தனித்தும் இயங்க முடியாத ஒரு தத்துவம் அல்லது த்ர்சனம் என்பதை இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேத மருத்துவமும் சித்த மருத்துவமும் போதித்து வருகின்றன. 

மேலைநாட்டு மருத்துவம் சில விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றுள்ளேயே இயங்குகிறது. Evidence based medicine (ஆதாரம் சார்ந்த மருத்துவம்) என்ற ஒரு தத்துவத்தை அது பறை சாற்றுகிறது. நாம் நவீன மருத்துவ இயலில் பல வளர்ச்சிகளை மனமார ஏற்றுக் கொண்டு அவற்றைப் போற்றினாலும் திரிதோஷ மெய்ஞானத்தில், எல்லாவற்றையும் உள்ளடக்கி நவீன மருத்துவத்திற்கும் இந்திய மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கி, ஒருங்கிணைந்து நன்றாக செயலாற்ற முடியும் என்று நம்பி சிகிச்சையளித்து வருகிறோம். யதார்த்தத்தில் இதில் வெற்றிகள் பல. தோல்விகள் சில.

ஒரு எல்லை உடல் நிலை நோய்கள்
மறு எல்லை மெய்ஞானம். 
ஒரு தரிசனம் ஆயுர்வேதம்
மற்றொன்று ஆங்கில மருத்துவம். 
இவற்றுக்கு நடுவில் அன்றாட வாழ்க்கை. 

இந்திய மருத்துவத்திற்கு என்று தனி தத்துவம் இருக்கிறது.  ஒரு தேடல் இருக்கிறது. தேடுதல் மூலம் கண்டடைதல் உள்ளது.  இவை பிரிக்க முடியாமல் இருக்கின்றன. சில வரையறுக்க (கருவிகளால் காண இயலாத) முடியாத விஷயங்களை இந்திய மருத்துவம் பேசுகிறது. ஆண்டாண்டு காலமாக இறை இயலைத் தொட்டு அந்த விஷயம் நடந்து வருகிறது. பிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் பார்கும் பார்வையின் விளைவே முக்குற்ற மெய்ஞானம். பகுத்தறியும் நோக்கை மேலை நாட்டு சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆயுர்வேத மருந்துகளுக்கு என்று பலசுருதிகள் (பிரயோகங்கள்) உள்ளன. இருந்தாலும் எல்லாவற்றுக்கும் நமது இறுதி நிலை என்பது விடுதலை என்பதுதான். 

· நோயிலிருந்து விடுதலை,
· அறியாமையிலிருந்து விடுதலை,
· துக்கத்திலிருந்து விடுதலை,
· பெருமைச் சூழலிலிருந்து விடுதலை,


இந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவம். ஒரு மெய்ஞான தேடுதலின் அம்சமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த விடுதலைக்கான சிந்தனைகள் நிகழ வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நமக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவைத் தெளிவாக்க (சரகர் கூறியபடி) திரிதோஷ அறிவு பாலமாக அமையும் என்றே நினைக்கிறேன். 

என் அகம் தெளிந்திருப்பதால் திரிதோஷம் சார்ந்த மருத்துவச் சூழலில் மேற்படியாக நடக்கும் Superficial discussion களை (சிகிச்சா ஞானமோ, அகத் தெளிவோ இல்லாமல், நடக்கும் மேல்மட்ட உரையாடல்கள்) நான் கவனிக்காமல் சிகிச்சையளிப்பதில் முழு முனைப்போடு செயல்படுகிறேன். மண்டையைப் பிளக்கும் சொல் ஆராய்ச்சிகள், பேராசிரியர் மற்றும் முதல்வர் பதவியை அடைய நடக்கும் அரசியல்கள், மடக்கி மடக்கி முன் வைக்கப்படும் தர்க்கங்கள், பிறர் சொன்னதையே திருப்பிச் சொல்லும் தத்தை போன்ற மனப்பாட பாடல்களின் ஒப்புவிப்புகள்,இவற்றிலிருந்து விலகி சிகிச்சையளித்து அதன் மூலம் திரிதோஷத்தை உணர்ந்து பிறருக்கு போதிக்க முயற்சிக்கிறேன். திரிதோஷம் சார்ந்த பூசல்களில் நான் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் நான் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் சிகிச்சை செய்கிறேன். என் குருநாதர் சொல்லித் தந்ததுதான் சரி என்று நான் வாதிட வரவில்லை. என் குருநாதர் சொல்லித் தந்ததும் சரி என்றே நான் வாதிடுகிறேன். ஒரு மஹாவித்வான் கல்யாணியை பல ரூபங்களில் பாடுகிறார்; இன்னொருவர்; வேறு கோணத்தில் பாடுகிறார். இறுதியில் கல்யாணி பாடினாரா என்பதே கேள்வி. அதுவும் இதயத்தைத் தொட்டதா என்பதும் மற்றொரு கேள்வி அந்த நிலையிலேயே திரிதோஷத்தை நான் கையாண்டு வருகிறேன்.

இந்த தத்துவங்களில் ஐயம் கொள்ள எனது மாணவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. அந்த தத்துவத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய நான் உதவுகிறேன். இதுதான் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட அல்லது வரையரைக்கப்பட்ட காலத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க பிரயத்னப்படும் ஒரு பேராசிரியருக்கும்  எனக்கும் உள்ள வேறுபாடு. எனக்கு எனது முழு வாழ்க்கையும்  திரிதோஷ பாடத்திட்டமாகும் அனுதினமும் தேர்வுமாகும்.  ஓரோர் நோயாளியும்  என்னுடைய பாட முறையில் தேர்வாளர்கள் ஆவர்.

படிப்பவவர்கள் முதலில் உள்ளை அறிய வேண்டும். இதை Applied Tridosha என்று சொல்வேன்.   இந்நிலையில் தன் அகத்தை தானே காணவும், அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் இது கைகொடுக்கும்; என்பது என் பாடமுறை. நமது சிந்தனை முறை உடலையும், மனதையும் பிடித்துப் பார்ப்பது அல்ல. உடல் மனம் என்கிற ஒரே அமைப்பாகவே மனிதனைப் பார்க்கிறது. முழுமையான ஒரு மருத்துவத் தீர்வை நோக்கிச் செல்லவே உடலையும், மனதையும் ஒன்றாகக் காணும் திரிதோஷத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. திரிதோஷ ஞானமோ திரிதோஷத்திற்காக அளிக்கப்படும் மருந்துகளோ ஊடுருவி படிமன்கள் போல செயல்படக் கூடியவை. இவை நமது தர்க்கத்தைத் தாண்டி பல அடுக்குகளை சென்று சேரும் படிமங்கள்  அவற்றுடன் நவீனம் சேருவது நோயாளிகளுக்கு நல்லது. நமக்கும் தவறுகள் குறையும். 

மனித பிரக்ஞை என்பது மனித உடலிலிருந்து விடுபடமுடியாதது.
நம் அகம் என்பது நாம் நமது உடலில் புலன்கள் மூலம் உணரும் அறிதலின் நுண் படிவமாகவே உள்ளது. படிமங்களாலும், மொழி  உருவங்களாலும்தான் நாம் நமது அகத்தை உணர முடிகிறது. அதில் நம் கல்லூரிப் படிப்பும் (BAMS) படிகிறது. அதைப்பின் நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. திரிதோஷத்தின் அகால  இருப்பு சூக்ஷ்மமானது என்பது சாதாரணமான நம் அறிதல்களுக்கு அப்பால் உள்ளது. இந்த நிலையிலிருந்தே திரிதோஷத்தின் தாக்கம் தொடங்குகிறது.

திரிதோஷ ஞானம் என்பது ஒரு தேடல். அதற்கு ஒரு குரு, ஆசிரியர் இருந்தால் நல்லது. அவ்வாறு ஒருவர் அமையும் வரை நமக்குப் பல விஷயங்கள்  புரியாது.  அடி ஆழத்தை திறக்க முடியாது. அது திறக்க முடியாமல் விடுதலையும் இல்லை. அதனைத் திறந்து பரிசீலித்தாக வேண்டும். அதனை முன்னிலைப் படுத்த ஒரு ஆசிரியர் வேண்டும்.  அந்த குருவை நீங்கள் சோதித்து நோயாளிகளை வைத்து விசாரணை செய்து ஏற்கலாம். இங்கு அவநம்பிக்கையும் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் அவரை ஏற்றபின், அந்த நம்பிக்கை உங்களை வெகுதூரம் எடுத்துச் செல்லும். குருவுடன் சேர்ந்து நீங்களும் வளர்வீர்கள். குரு உங்களை உடைத்து வார்ப்பார். அவர் அறிவின் பிரக்ஞை  உங்கள் மீது மோதும் பொழுது ஏற்படும் வலி பயங்கரமாக இருக்கும். நாம் நம்மை இழப்பதை உணர்வோம்.  இந்த நிலையில் நாம் நம்மை தக்க வைத்துக் கொள்ள போராடுவோம். இழப்பு நமக்கே. கல்லூரியில் நம்மை உடைக்காதவர்; நமக்குப் புதிதாக எதுவும் தருவதில்லை. திரு. வைத்தியநாதன் சார் என் அகத்தை உடைத்தார். ஆழ்ந்த சாஸ்திரம் இல்லாத நிலையில் ஆசிரியர் ஒருவர் தன் மனதில் தற்செயலாகத் தோன்றும் எளிய கருத்துக்களை அறிய ஞானத்தின் திறப்புகளாக எண்ணி வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஞானத் துளிகள் வெளியில் வருவதற்கு ஆழ்ந்த சாஸ்திர பாடம் வேண்டும். இதற்கு பயிற்சி தேவை. நாம் அடைந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்றுக் கொண்டால்தான் இந்த ஞான வெளிச்ச விளக்கவுரைகள் வெளியே வரும். 


· திரிதோஷம் என்பது ஒரு மருத்துவச் சொல்.
· ஒரு கலாச்சாரச் சொல்.
· ஒரு பண்பாட்டுச் சொல்.
· ஒரு யதார்த்தச் சொல்.
· ஒரு உயிரோட்டமுள்ள சொல்.
· ஒரு பிரக்ஞையை பிரதிபலிக்கின்ற சொல்.
· இது வேதங்களின் பிராணனை வெளிப்படுத்தும் சொல்.
· இது எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல.
· இது எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதல்ல.

இது மண்ணில் உள்ள நதிகளைப் போல காடுகளைப் போல இங்கே பிறந்த அல்லது எந்த நாட்டிலும் பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. இது என்னுடையது என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

முன்பே கூறியபடி, திரிதோஷ அறிதல் அகவயமான ஒரு அறிதல், அதனால் உண்டாகும் ஒரு ஆற்றல் அகவயமானது. இது எல்லா பரிணாங்களையும் உள்ளடக்கியது.  சிகிச்சை என்ற ஒரு தளத்தின் மூலம் புறவயமாக அதனை நிரூபிக்க முடியும். அனைத்திலும் திரிதோஷத்தை காண இயலாதவர்கள், BP பார்க்க மறுப்பவர்களெல்லாம் இந்த மனநிலைக்குள் வர முடியாதவர்கள். ஒட்டு மொத்த திரிதோஷம் மற்றும் நவீனமும் கலந்த ஞானப் பரப்பு ஞான நிலை, ஒரு மோசடி அல்லது ஆயுர்வேதத்துக்கு விரோதமான செயல் என்று இவர்கள் சூளுரைக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருப்பதும், நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் அதுவே. இதன் காரணம்; அவர்களுக்கு அனைத்தையும் திரிதோஷத்தில் உள்ளடக்கத் தெரியவில்லை. நமக்குத் தெரிகிறது.

திரிதோஷ கல்வி ஒரு தொழில் நுட்பம் மட்டுமே. இந்த தொழில் நுட்பத்தையே அறியாத இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகி வந்தபின் அவர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டிய நிலைமையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பாக்டீரியாவிலும், வைரஸிலும், புழுவிலும், பூச்சியிலும், மீனிலும், பறவையிலும், தேளிலும், பாம்பிலும், குதிரையிலும், யானையிலும், புலியிலும் திரிதோஷம் இருக்கிறது. வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்ற புரிதலை ஒரு ஆசான் ஏற்படுத்த வேண்டும்.

திரிதோஷத்துக்குரிய தெளிவியலை, நாமே முனைந்து ஆசானை அடைந்து பல படிகள் ஏறி, அகத்தில் தெளிவு பெற்று, மூட நம்பிக்கைகளை அழித்து மனப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, மேலே சென்று, பயணத்தின் எல்லா படிகளையும் கடந்து, மெய்ஞானம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது ஒரு தூய மெய்த் தேடலாக எந்தவித அடையாளமும் அற்றதாக அந்தரங்கமாகவே இருக்கிறது. எனது மாணவர் கூட்டம் இதை ஒரு நாள் பிரகடனப்படுத்தும்.

அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறலாம்.

திரிதோஷ நிராகரிப்பது என்பது நவீன மருத்துவர்களால் இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இதை வெறும் புத்தகக் குறிப்பாக மட்டுமே பார்ப்பது முழமையற்றது. அப்படியே, தத்துவமில்லாமல் தூய உணர்வு எனக் கற்பனை செய்து கொண்டும் எதையும் கற்க, புரிய,  அறிய முயற்சிக்காமல் இருப்பதும் முழுமையற்றது.

திரிதோஷ கல்வியை படித்தததற்காக நம்மில் பலர் நவீனத்துடன் இணைந்து செயலாற்றாமையை ஒரு நிலைபாடாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தத்துவமற்ற உள்ளுணர்வு, வெளிக்கு சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அறியாமை என்ற முள் அவர்களிடம் உள்ளது. அதை ஆணவ முள் மறைக்கிறது. அதை வைத்துக் கொண்டு வெகு தூரம் செல்ல முடியாது. அவர்கள் செய்வது ஒரு தர்க்க வாதமே. அந்த முள்ளினால் குத்தப்பட்ட கால் பழுக்கலாம். நாளை நாம் நவீனத்தை நாடலாம். என்னால் அதை நாடும் பொழுது எனது தன்மையை இழக்காத முறையில் நாடமுடியும். இது அவர்களுக்கு புரிவதும் இல்லை, அவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் இல்லை. விஞ்ஞானத்துடன் இணைதல் மூலமே ஒரு உச்சக்கட்ட சாத்தியம், மருத்துவத்தில் கோடிட்டு காட்டப்படுகிறது.

இந்த பூமியில் வாழும் எந்த மனிதனும் திரிதோஷ தர்சனம் இல்லாதவனாக இல்லை. இந்த உலகத்தில் பிறப்பு.  செயல்பாடு, அழிவு விடுத்து அவனுக்குள் ஒரு உருவகம் இருக்கும். உருவகம் இருந்தால்தான் சொந்த வாழ்க்கையை அவனால் வகுத்துக் கொள்ள முடியும்.  இதையே ஆயுர்வேதம் மஹாபிரக்ருதி என்கிறது. பிரக்ருதிக்குள்ளளேயே நாமெல்லாம் அடங்குகிறோம். இந்த அடக்கம் தூய அறிவையும் உட்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாமே திரிதோஷம்தான். அப்படி இருக்கும் போது தனி நவீனம் எங்கே, சுத்த ஆயுர்வேதம் எங்கே?

திரிதோஷ ஞானம் என்பது ஒரு எல்லையை உயர் தெளிவையும், சிகிச்சையையும், தினச்சர்யையும்,ருதுச் சர்யையும், வேக அவரோதத்தையும், எடுத்துக் கொண்டு, தொடர்ச்சியாக ஒரு வைத்தியன் நிகழ்த்தும் ஒரு யக்ஞமே.

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, இந்த யக்ஞம் பல வைத்தியர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பலவிதமான இணைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த திரிதோஷ யக்ஞத்தை செய்யாத வைத்தியர் யாரும் இல்லை. இந்த திரிதோஷத்தை தொட்டுப் பார்க்காத வைத்தியர் எவரும் இல்லை.  நவீனமோ, பழமையோ, அங்கு திரிதோஷம் இருக்கிறது என்பதும், திரிதோஷதிலிருந்து எந்த இந்திய தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும், இயைபியலையும் பிரிக்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறு சுத்த ஆயுர்வேதம் என்றுக் கூறி பிரித்தால் பூரண மெய்ஞான  தத்துவத்திலிருந்து நம்மை நாமே விலக்கிக் கொண்டு விடுகிறோம் என்பதே சத்தியம். இப்படி முடியாது என்பது புரிந்து  கொள்ள வேண்டும்.

அவ்வாறு புரிந்து கொள்ளாதவர்களுக்காக நாம் மெளனம் சாதிப்பதோ அல்லது ஒதுங்குவதோ தான் சிறந்த வழி. ஏனென்றால் அவர்கள் திருந்தப் போவதில்லை.

தெளிவுடன்,
மருத்துவர். இல. மகாதேவன்.




























2 கருத்துகள்:

  1. KodaiMatrimony.com is one of the foremost Indian Matrimonial webSite all over the world, providing the wide database of prospective brides and grooms profiles. Find the life partner with the help of best online matrimonial site.

    பதிலளிநீக்கு