சனி, 26 செப்டம்பர், 2015

தனக்குவமை இல்லாதான் / வாழ்வாங்கு வாழ்ந்தவர் / தாயாகி தந்தையுமாய் தாங்கி நின்ற தெய்வம் / குருவாய் வந்து அருள் செய்த குகன்தனக்குவமை இல்லாதான்
வாழ்வாங்கு வாழ்ந்தவர்
தாயாகி தந்தையுமாய் தாங்கி நின்ற தெய்வம்
குருவாய் வந்து அருள் செய்த குகன்

1997 என்று நினைக்கிறேன். நான் ஆயுர்வேதத்தில் முதுகலை பட்டப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்க போகும் தருணம். அந்த நேரத்தில் அடுத்து என்ன செய்வது, குலத் தொழிலை தொடர்ந்து செய்வதா அல்லது புதிய இடங்களில் வேலைக்கு செல்வதா அல்லது ஒரு கல்லூரியில் ஆசிரியராக போவதா என்று குழம்பி போய் இருந்த நேரத்தில் என்னிடம் மிகவும் அன்பும், பரிவும் காட்டுகின்ற சித்தப்பா ஒருவர் அவருடைய ஒன்று விட்ட சகோதரரிடம் என்னை அழைத்து சென்றார். அவர் என்னை, உனது மனத்தன்மைக்கும், தேவைக்கும் பொருந்தும் இடம் இருக்கிறது என்று சொல்லி ஆனைக்கட்டி ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார். அன்று தான் கருணைக் கடலாகிய வாழும் தட்சிணாமூர்த்தியாகிய மறைப் பொருளாய் மறைந்து நிற்கும் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற ஒரு உத்தம துறவியைக் கண்டேன். ஆயுர்வேதம் படித்த மாணவன், ஒரு இளைஞன் என்று சொன்னவுடன் கருணையுடன் பேசி இனிப்பை எடுத்துக் கொடுத்தார். ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணவு அருந்திவிட்டு போங்கள் என்று அவர் சொன்னார். மனதிற்குள் ஒரு ஆழ்ந்த  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்பொழுது அவர் சொன்னார் சென்னையில் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தொடங்கி இருக்கின்ற கல்லூரிக்கு உனக்கு கடிதம் தருகிறேன். நீ அங்கு போய்  வேலையில் சேர்ந்துவிடு என்று சொன்னார். நான் வீட்டிற்கு வந்து தவத்திரு ஸ்வாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் அந்த இடத்திற்கு சென்று வந்தேன். அந்த நாட்களில் அதிகம் நோயாளிகள் இல்லை, ஆதலால் எனக்கு அங்கு செல்ல மனமில்லை என்பதை எடுத்துரைத்தேன். அந்த கடிதத்திற்கு பதில் எழுதிய கருணாமூர்த்தி உன் தாத்தாவின் தொழிலையே அபிவிருத்தி செய்து நடத்து, மேலும் விருத்தி செய், நான் வந்து திறந்து வைக்கிறேன் என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் அவர் காட்டிய பாங்கு இது. 


நான் தெரிசனங்கோப்பு கிராமத்திற்கு வந்து பல குடும்ப சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் இடையே எனது தந்தையார் உதவியுடன் ஆறு அறைகளும், இரண்டு பஞ்சகர்மா அறைகளும் உள்ள ஒரு கட்டிடத்தை கட்டினேன். ஸ்வாமிகள் வந்து அவருடைய திருக்கரங்களால் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். அப்பொழுது அந்த மேடையில் ஸ்வாமிகளிடம் நான் பேசும் பொழுது இது மிகப் பெரிய ஸ்தாபனம் அல்ல. இதை தொடங்கியவர் ஒரு தர்மவான், வேதத்திற்காக வாழ்ந்தவர், சத்தியத்தை விடாமல் தொழிலை செய்தவர், உத்தமர், அந்த குலத் தொழிலை நான் செய்ய வேண்டும். உங்கள் திருக்கரங்களால் இது தொடங்கப்பட வேண்டும் என்பது எனது அவா. எனது மருத்துவ வாழ்வு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்காக தான் உங்களை வரவழைத்தேன், வேண்டிக் கொண்டேன் அல்லாமல் என்னிடம் உங்களிடம் காட்டுவதற்கு பெரிய பெரிய கட்டிடங்களோ, எந்திரங்களோ எதுவும் இல்லை என்று கண்ணில் நெகிழ்ச்சியுடன் ஓடினேன். ஸ்வாமிகள் அந்த மரப் பாத்தியைப் பார்த்துவிட்டு பின்பு மருந்து செய்யும் கூடத்தை பார்த்து விட்டு அடியேனுடைய இல்லத்திற்கு வந்து அருள் அமுதை பெற்று கொண்டு பின்பு எங்கள் ஊரில் உள்ள கோவிலையும் பார்வையிட்டார். எங்கள் வீட்டில் இருக்கின்ற ஏணி, திண்ணை போன்ற பழமையான அமைப்பு அவரை மிகவும் கவர்ந்தது. என்னுடைய தாத்தாவின் வாழ்க்கையை அவரிடம் எடுத்துரைத்த பொழுது மகிழ்ச்சியுற்றார். தெரிசனங்கோப்பு கிராமத்தில் இருக்கின்ற திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் மடம் போன்றவற்றை எல்லாம் காண்பித்தப் பொழுது ஒரு காலத்தில் இங்கு சைவம் தழைத்தோங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மதியம் ஒரு மணி அளவில் ஸ்வாமிஜியும் அவருடன் வந்தவர்களும் கிளம்பி போனார்கள். அன்று அவர்கள் பயோனியர் குமாரசாமி வளாகத்தில் “நமது வாழ்வில் இறைவன்” என்ற தலைப்பில் அருள் சொற்பொழிவு ஆற்றினார். ஊருக்கு போகும் பொழுது சீக்கிரம் கோயம்புத்தூருக்கு வா என்று சொன்னார். உடனே சிறிது நாட்களில் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. ஸ்வாமிஜியிடம் இருந்து தனிப்பட்ட கடிதங்களும், வாழ்த்து மடல்களும் எனது தந்தையார் பெயருக்கு வந்தது. திருமணம் ஆன ஒரு வாரத்தில் நான் எனது மனைவியுடன் ஆனைக்கட்டி ஆஸ்ரமத்திற்கு சென்றேன். அன்று தான் முதன்முறையில் ஸ்வாமிகள் முன்னிலையில் எனக்கு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. யார் செய்த புண்ணியமோ ஸ்வாமிஜியின் அருளால் அவர் முன் நன்றாக பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவருடைய இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தன்னுடைய நுண்மான் நுழைப் புலத்தால் எனது சாஸ்திர அறிவையும், அதை தெரிந்து கொள்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் எல்லா கேள்விகளுக்கும் ஸ்லோகங்களை சொல்லி சாஸ்திர பிரமாணம் சொன்னதையும் அவர் மனதில் வைத்துக் கொண்டு உளமாரப் பாராட்டினார். பின்பு எங்கள் இருவரையும் உடனே அமர்ந்து சாப்பிடச் சொன்னார். திருமணம் ஆகி இருக்கிறது இவளை வெளியே கூட்டிக் கொண்டு போய்விட்டு வா என்று சொன்னார். நாங்கள் ஊட்டி போன்ற இடங்களுக்கு எல்லாம் போய்விட்டு மீண்டும் ஆஸ்ரமத்திற்கு  வந்தோம். ஐந்து ஆறு வகுப்புகள் அன்று எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்வாமிகள் மெய்மறந்து ரூ. 5001 தட்சிணையாக கொடுத்தார்கள். ஸ்வாமிஜியிடம் நான் பணம் ஒன்றும் வேண்டாம். உங்கள் அருட்பார்வை ஒன்றே போதும் என்று சொன்னதற்கு நீ மேலும் மேலும் வளர வேண்டும் அப்பா, நீ முன்னுக்கு வர வேண்டும் என்று சொன்னார், அதற்குத்தான் இது என்றார். கண்ணீர் ததும்பியது, நெஞ்சம் கனத்தது. யார் செய்வார்கள் இப்படி? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? நான் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன், என்னை விட பெரியவர்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். சாஸ்திரம் படித்து குப்பையில் கிடைக்கின்ற ஒரு கல்லை கூட மாணிக்க கல்லாக  மாற்றி கோபுரத்தில் ஊச்சியில் வைக்கின்ற ஒரு சத்குரு அவர். அதற்கு நான் ஒரு உதாரணம். 


2000 ம் ஆண்டில் பரம பூஜ்ய ஸ்வாமி அவர்கள் தான் நடத்தி வருகின்ற அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் சைலோஸ்பெர்க் எனும் இடத்தில் ஒரு ஆசிரமம் இருப்பதாகவும் அங்கு வேதாந்தா, யோகா மற்றும் ஆயுர்வேத வகுப்புகள் நடப்பதாகவும் நீ போகிறாயா? பாடம் சொல்லிக் கொடுக்கிறாயா என்று கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் ஸ்வாமிஜியின் மாணவர்களாகிய திரு. ஜி எஸ் ராமன், திருமதி. கீதா மாமி அவர்களிடம் பழக்கம் இருந்தது. அவர்களது மகள் Dr. பத்மா அவர்கள் நேச்சுரோபதி படித்துவிட்டு என்னிடம் சிறிது ஆயுர்வேதம்  கற்றுக் கொண்டிருந்தார். நான் ஸ்வாமிஜியின் வாக்குப்படி விஸாவுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கு முன் லண்டனுக்கு விஸா விண்ணப்பித்திருந்தேன், ஆனால் அது கிடைக்கவில்லை. 


ஸ்வாமிஜியின் அருளால் அமெரிக்கா விஸா கிடைத்தது நான் Dr. பத்மா அவர்களுடன் சேர்ந்து சைலோஸ்பர்க் ஆசிரமத்திற்கு சென்றேன். ஒரே பரபரபப்பாக இருந்தது. திருண் கோபால் என்கிற ஆங்கில மருத்துவர் (பெண் நோய் சிகிச்சை நிபுணர்) அந்த குழுவுக்குத் தலைவராக இருந்தார். அதில் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதில் 15 நாட்கள் அவர்களுக்கு ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களை போதிக்கின்ற ஒரு பாக்கியம் எனக்கு ஸ்வாமிஜியின் அருளால் கிடைத்தது. அவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற வகையில் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக பேருரை ஆற்றினேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. 


அங்கிருந்து ரோச்சஸ்டர் எனும் ஊருக்குச் சென்று தொடர் வகுப்புகள் நடத்தினேன். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்று டாக்டர். லக்ஷ்மி நடிகிர் அவர்கள் ஏற்பாட்டில் வகுப்புகள் நடத்தினேன். அங்கு திரு. வெங்கி ராமன் எனும் அற்புதமான ஒரு நபரை சந்தித்தேன். பின்பு நியுயார்க்கில் ஒரு இடத்தில் சிறப்பு வகுப்பு நடத்தினேன். பின்பு ஒரு சில இடங்களைப் பார்த்துவிட்டு எனது இரண்டு சித்திகள் வீட்டுக்கும் சென்று விட்டு வந்தேன். அடுத்தமுறை ஸ்வாமிஜி எனக்கும், எனது மனைவிக்கும் டிக்கட் எடுத்துக் கொடுத்தார். மனைவியை அழைத்துக் கொண்டு பல ஆழ்ந்த கட்டுரைகள் பலவற்றை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சிறப்பான வகுப்புகளை நடத்தி முடித்தேன். 


உடல்நிலையும்,  வயிறும் சற்று பாதித்தது. அங்கிருந்து கனடா சென்று சிவானந்த ஆசிரமத்தில் தொடர் வகுப்புகள் நடத்தினேன். பின்பு இந்தியா வந்து 15 நாட்கள் இருந்தபின்பு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பரமஹம்ஸ  யோகானந்தரின் ஆசிரமத்துக்குச் சென்று வகுப்புகள் நடத்தினேன். அதன் பின்பு பத்மா அவர்கள் 25 நேச்சுரோபதி மாணவர்களை ஆயுர்வேதம் படிப்பதற்காக கோயம்புத்தூருக்கு அழைத்து வந்தார்கள். கோயம்புத்தூரில் ஆனைகட்டி அசிரமத்தில் நான், எனது மனைவி, அம்மா மற்றும் அப்பா ஆகியோர்கள் சென்று தங்கியிருந்து 40 நாட்கள் வகுப்புகள் நடத்தினோம். அதன்பின்பு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு தயா என்று பெயரிட்டோம். ஸ்வாமிஜி மிகவும் சந்தோஷமடைந்து ஆஸீர்வதித்தார்கள். 


அதன் பின்பு கோயம்புத்தூருக்கு ஒவ்வொருமுறை செல்லும் போதும் ஸ்வாமிஜி  எனக்கு வகுப்பு நடத்துவதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த நாட்களிலெல்லாம் ஸ்வாமிஜியுடன் அமர்ந்து பேசுவதற்கும், உணவருந்துவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஸ்வாமிஜி என்னை ஆயுர்வேதத்தின் Faculty of Arsha Vidya Gurukulam  (He is our faculty) என்று ஒருநாள் எல்லோர் முன்னிலையும் சொன்னார்கள்.

ஒரு சில நேரங்களில் நான் மிகவும் நகைச்சுவையாக பேசுவதுண்டு, அதனை ஸ்வாமிகள் மிகவும் ரசித்தார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஆயுர்வேதம் பேசும்பொழுது, ஆயுர்வேதம், தத்துவம், வேதாந்தம் எல்லாம் கலந்து சரகத்தைத் தொட்டு பேசுவதுண்டு. இது ஸ்வாமிஜிக்கு மிகவும் பிடிக்கும். சாஸ்த்திர பிரமாணத்துடன் பேசுவது ஸ்வாமிஜிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு முன்பு பல சிறந்த வைத்தியர்கள் அங்கு போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தார்கள். ஆனால் சாஸ்திரபாடம் என்கின்ற விஷயத்தில் ஸ்வாமிஜிக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அவர்களை விட நான் சிறந்தவன் என்ற எண்ணமல்ல, அவர்களும் சிறந்த மருத்துவர்கள்தான். ஒரு சில ஆங்கில மருத்துவர்களுக்கு ஆயுர்வேதம் என்றாலே பிடிக்காமல் இருந்தது இதை ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் சொன்னபொழுது, அதை விட்டுத் தள்ளிவிட்டு உன் வேலையைப் பாரப்பா என்று சொல்லிவிட்டார். உனக்கு என்னப்பா இப்பொழுது குறை நன்றாகத்தானே இருக்கிறாய் என்று கேட்டார். அது மனதுக்கு மிகுந்த ஆறுதலாகவும், புண்ணுக்கு மருந்தாகவும் இருந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு கருணையான மனிதர். ஒரு முறை ஸ்வாமிஜி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பொழுது ஒரு தன்வந்தரி படத்தைப் பார்த்திருக்கிறார். அங்கிருந்த திருமதி. சந்திரா அம்மாவிடம் அதை வாங்கச் சொல்லி எனக்குப் பரிசளித்தார். அந்த தன்வந்தரி ரங்கநாதனுக்கே வைத்தியம் பார்த்தவர், நீ பூஜையில் வைத்துக்கொள், அபூர்வமான படம் என்று சொல்லி ஸ்வாமிஜி எனக்கு அந்த படத்தை அளித்தார்கள். அதன்பின்பு ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் அவருடைய சேஷ வஸ்திரம் கேட்டு வாங்கினேன். அதையும் சந்திரா அம்மாதான் எடுத்துக் கொடுத்தார்கள். பின்பு எனக்கு மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் எனக்கு உபதேசம் செய்து அறிவுரை வழங்கினார்கள்.   எனக்கு இடையில் ஒரு சோக மனநிலை ஏற்ப்பட்டது. உனக்கு இந்நிலை வரக்கூடாதேப்பா You do not deserve this என்று சொல்லி எனக்கு ஒரு ருத்ராக்ஷத்தைக் கொடுத்தார்கள். இப்படியெல்லாம் ஸ்வாமிஜி செய்து கொண்டிருக்கின்ற பொழுது நான் எழுதிய 60 புத்தகங்களையும் 16000 பக்கங்கள் கட்டுரைகளையும் ஒலிப்பேழைகளையும் ஸ்வாமிஜியிடம் கொண்டு காண்பித்தபொழுது பிரமித்து போனார்கள். உனக்கு மிகுந்த பாராட்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். 

Dr. Vasant Lad அவர்களுக்கு அமெரிக்காவில் கொடுத்தேன். இங்கு உனக்குத் தருகிறேன் என்று சொல்லி மஹா மேதை BKS ஐயங்காருக்கும், எனக்கும், திருப்பரங்குன்றம் ராஜா பட்டருக்கும் ஆர்ஷ குல ச்ரேஷ்டா என்ற விருதினை வழங்கினார்கள். அதில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும், கேடயமும் இருந்தது. அன்று மாலை இசை விற்பன்னர்களாகிய திருவாரூர் பக்தவத்சலம், அருணா சாய்ராம் போன்றவர்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கினார்கள்.
அந்த விருதில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதியிருந்தன. அவையாவன
Arsha Kula Sreshta is being awarded on Dr. L.  Mahadevan for his contribution to teaching Hindu dharma through Ayurveda the ancient knowledge and authoring authentic books and practicing Ayurveda  என்று 16 நவம்பர் 2014 ல் கையெழுத்திட்டு கொடுத்தார். இதையே ஒரு மிகச் சிறந்த பேறாக நான் கருதுகிறேன். Dr. Vasant Lad மற்றும் பூஜ்யஸ்ரீ  BKS Iyyangar அவர்களுக்கும் இந்த விருது கிடைத்துள்ளது. 
        என்னையும் ஒரு பொருட்டாக மதித்து பழைமையான மருத்துவத்தை நான் படித்து போதித்து வருவதை அவர்கள் உணர்ந்து அதை ஆதரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அளித்தார்கள்.  ஆசிரமத்தில் அனைவருமே அவரை நேசித்தார்கள். 


அவர் கருணையின் பூரண வடிவமாக விளங்கினார். தயா என்றால் கருணை என்று பொருள். யாதேவீ ஸர்வ பூதேஸு தயா ரூபேண ஸம்சிதா, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ என்பது ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிக்கு தான் பொருந்தும். பலருக்கு தாயாக இருந்தார், பலருக்கும் அவர் குருவாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். தாயாய் தந்தையாய் தாங்குகின்ற தெய்வமாய் இருந்தார். ஒப்பாரும் மிக்காரும் இலர் என்று சொல்லக்கூடிய அளவில் ஆழ்ந்த வேதாந்தப் பாடங்களை மிக எளிமையாக கற்றுக் கொடுக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இவரைப் போல் ஆச்சார்யர்கள், ஆசிரியர்கள் இனி கிடைப்பார்களா என்பது சந்தேகமே. 300க்கும் மேற்ப்பட்ட சிஷ்யர்களை உருவாக்கி அவர்களுக்கு சன்னியாசம் வழங்கியுள்ளார். ஸனாதன தர்மத்தின் மேல் அதீதப் பற்று இருந்தது. தட்சிணாமூர்த்தி கோவிலில் நடக்கின்ற பூஜை பரம பவித்திரமான பூஜைக்கு போகும் நேரம் ஒருமுறை அவர் எனது தாய், தந்தையரைப் பார்த்து நீங்கள் இங்கு வந்து இருங்கள் என்று கூறினார். ஒருமுறை நான் வாழைப்பழம் வாங்கிச் சென்ற பொழுது அவர் ஆப்பிளை கையில் எடுத்து பிரஸாதமாக கொடுப்பதற்கு இது தான் சிறந்தது என்று சொன்னார். மிகுந்த நகைச்சுவை தன்மை உடையவர், ஆழ்ந்த வேதாந்தக் கருத்துக்களை நகைச்சுவைத் தன்மையுடன் சொல்வார். ஆதிக் கால சொற்பொழிவுகளில் வேகம் கொப்பளிக்கும். துடிப்பான ஒரு பேச்சாளர். நிறைய சாத்திராலயங்களை கட்டி மாணவர்களுக்கு வாழ்வு அளித்தார். சாதிப் பாகுபாடு கிடையாது. எல்லோரும் அவருக்கு ஒன்று தான். பாடம் சொல்லிக் கொடுப்பதில் பாகுப்பாடு கிடையாது. படிக்க ஆசை இருந்து தகுதியிருந்தால் அவன் மாணவன் தான். வெளிநாட்டில் உள்ளவர்கள் சமஸ்கிருதத்தைப் படித்து, பாணினியைப் படித்து, வேதாந்தத்தைப் படித்து, ஸ்ரீமத் பகவத்கீதையைப் படித்து இருக்கிறார்கள் என்றால் அது ஒரு சாதாரணமான விஷயமாக சொல்ல முடியாது.


அப்பேர்ப்பட்ட மகானின் பூத உடல் இன்று நம்முடன் இல்லை ஆனால் மணிக்கூர் கணக்கான ஒலிப்பேழைகள், புத்தகங்கள், பாட முறைகள், நற்கருத்துக் கோப்புகள் எல்லாம் உள்ளன. அவற்றை கேட்டு படித்து அனுசரித்து வாழ்ந்து சேவை செய்து அவருடைய புகழுக்கு களங்கம் வராதபடி நடந்து கொண்டு அவரை அனுதினமும் நினைத்து வணங்கி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் தொண்டாகும். “வாழ்க நீ எம்மான்என்ற பாரதி பாடினாரே இதைப் போல என்றுமே அவர் நம்முடன் வாழ்கிறார். பிறப்பு இறப்பு என்பது ஒரு வாழ்வினில் நடக்கும். மரணம் என்பதே ஞாபக தொடரில் வரும் ஒரு முறிவு போல தான். அவர் மரணத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார். அவருடைய கடோப உபநிஷத் தொகுப்புகளை கேட்டால் அதைப் பற்றி புரியும்

தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன்
தாள் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.
                                    என்கிறார் திருமூலர்.

நமது குருநாதர் சத்குரு தயானந்த ஸ்வாமிகளின் திருவடி, அருளனுபவத்தைத் தரும் திருவடியாகும். இது தன்னை அறியச்செய்யவல்லது, பரம்பொருளையும் அறியச் செய்ய வல்லது.

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
                                என்கிறார் திருமூலர்.

இரும்பு இரச வேதியில் பொன்னானால், மீண்டும் இரும்பு ஆகாது. அதுபோல, ஆன்மா பக்குவம் பெறும்பொழுது, குருவின் அருளைப் பெற்றால், மீண்டும் பிறவாது.

நமது குருநாதர்

            நேயத்தே நிற்கும் நிமலன்
            மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன்
            நித்தன் சுத்தன்
என்பது உண்மை

பிறப்பாலும், இறப்பாலும் மாறாத ஒரு நிலையை புரிந்து அறிந்து தெரிந்து வாழ அவர் காட்டிய வழி பெரிய வழியாகும்.

நான் 15 நாட்களுக்கு முன்பு  அவரை ரிஷிகேசத்தில் சந்தித்தபொழுது  நன்றாக இருப்பா என்று கூறினார்.

அவர் எனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நினைத்துப் பார்க்கின்ற பொழுது யசோதர காவியத்தில் படித்த மாயனில் குணக்குன்றென்ன மாதவன் இறைவன் வந்தான் என்ற பாடலும்கம்பனின் அருந்தவ முனிவரோடிருந்த குன்று போல் குணத்தான் என்ற வரிகளும் என்னுள் நினைவுக்கு வருகிறது.

அவர் செய்த உதவியை நினைக்கும் போது

பயன் காரணத்தைக் குறியாமல் பரிந்து காலத்தால் செய்த
நயஞ்சேர் நன்றி சிறிதேனும் நாடின் அதற்கோர் அளவில்லை
பயன் காரணத்தைக் குறித்தினையும் பதத்திற் புரிந்த நன்றியையும்
வியன் பூதலத்தில் பெரிதாக விரும்பி மதித்தல் வேண்டுமானால்.
என்ற வரிகளும் நினைவுக்கு வருகின்றன. ஆதலால் அவரை வணங்கிப் போற்றுவோம்.
ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் செய்நன்றி அறிதலைப் பற்றி ஒரு பாடல்

சிதைவகல் காதற் றாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப்,
பதவி அந்தணரை யாவைப் பாலரைப் பாவைமாரை,
வதைபுரி குநர்க்கும் உண்டா மாற்றலா மாற்றன் மாயா,
உதவிகொன்றார்க்கென்றேனும் ஒழிக்கலாம் உபாய முண்டோ

                                                                                                                   (கம்ப.கிட்கிந்தை. 62)

 என்ற வரிகள் மூலம் அவர் எனக்கு செய்ததை நினைவுகூர்கிறேன்.
இப்படிக்கு
Dr. L. மகாதேவன்

திங்கள், 29 செப்டம்பர், 2014

Rama Sarma - என்று நான் காண்பேன் இனி

என்று நான் காண்பேன் இனி
          “I am Rama Sarma”  என்று பொலிவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எனது பெரியப்பா அன்பிற்குரிய சிவத்திரு. ராம சர்மா அவர்கள் 18.9.2014 அன்று இறையடி அடைந்தார்கள் என்ற செய்தியைக கேட்டு சொல்லணா துயரம் அடைந்தேன்.
          அதிகாலை 6 மணியளவில் எனது தாயார் ‘மகாதேவா’ என்று அலறியதைக் கேட்டு எனது அப்பாவுக்குத்தான் ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சி கீழே வந்தபொழுது இந்த அதிர்ச்சி செய்தியானது சென்னையில் இருந்து வந்திருந்தது. திரு. ராம சர்மாவிற்கு இறக்கும்பொழுது வயது 74. அவரும், எனது அப்பாவும் இரட்டைக் குழந்தைகள்.
          Fraternal twins என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு ஒரே போல் இருக்க மாட்டார்கள். குணாதிசயங்களும் சற்றே வேறுபட்டுத்தான் இருக்கும். எனது தகப்பனாருக்கும் சரி, பெரியப்பாவிற்கும் சரி ஒருவருக்கொருவர் இடையில் அன்பும், பாசமும் உள்ளுணர்வும் மிகுந்திருந்தது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டதை அபூர்வமாகவே நான் பார்த்திருக்கிறேன்.
          திரு. ராம சர்மா அவர்கள் ஒரு எளிமையான மனிதர். வாழ்க்கையில் அத்யயனம் (படித்தல்), அத்யாபனம் (படிப்பித்தல்), ஸத்வித்யா சம்பாஷணம் (படித்தவர்களுடன் உரையாடுதல்) என்று சரகர் கூறும் மூன்று விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர். இவற்றை அவர் சந்தோஷத்துடன் செய்து கொண்டிருந்தார். இறுதி மூச்சு வரை அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மரணப் படுக்கையில் பீஷ்மரைப் போல அவரை கிடத்துக்கின்ற பொழுது அவரை சுற்றி மாணவர் கூட்டமே அதிகமாக இருந்தது. ஒரோர் மாணவரின் இருதயக் கூட்டை அவர் தன் பாடத் திறமையினாலும், அன்பினாலும் ஆட்கொண்டிருந்தார் என்பதை என்னால் உணர முடிந்தது. எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்லுவார். ஒரு சாக்கை விரித்து அதிலேயே படுத்துத்  தூங்கி விடுவார். சாப்பாட்டில் கூட இது தான் வேண்டும், அது தான் வேண்டும் என்று கிடையாது. எது கிடைத்ததோ அதையே சாப்பிடுவார். ஹோட்டலில் போய் சாப்பிடுகின்ற பழக்கம் கிடையாது. இல்லையென்றால் 4 வாழைப் பழங்களை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை குடித்து விடுவார். வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களிலேயே அவருக்கு சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்றவை வந்தன. ஆரம்ப காலத்தில் புகையிலைப் பழக்கம் சற்று இருந்தது. ஆதலால் பக்கவாத நோய் வந்து பேச்சு தடைபட்டது. ஆனால் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். நமக்கு ஒரு நோய் வந்துவிட்டதே, மீண்டும் வந்துவிடக் கூடாதே என்ற எண்ணமோ, பயமோ நான் அவரிடம் கண்டதில்லை. Dr. டைனி நாயரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் கூறுகின்ற விஷயங்களைக் கேட்டு அப்படியே செய்வார். இரண்டு தினங்களுக்கு முன்புதான் எனது பெரியப்பாவுக்கும் பெரியம்மா திருமதி. ஜெயலெட்சுமிக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் பூர்த்தியாகி இருந்தது. 50 வருட திருமண வாழ்க்கை என்பது ஸனாதன தர்மத்தில் ஒரு ஆன்மீக சாதனை என்றே குறிப்பிடலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களை வாழ்க்கையின் இலட்சியமாக வகுத்துக் கொண்ட ஒரு புருஷன் வானப்ரஸ்தாஸ்ரமத்தில் சென்று வாழ்க்கையின் இறுதியை அடைய காலடி எடுத்து வைக்கும் சமயம் இது.
இவர் பழகுவதற்கு எளிமையானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய மூத்த மகனுக்கும் என்னுடைய பெயர்தான் - மகாதேவன்.
          பெரியப்பாவின் இசையறிவு ஒப்பில்லாதது. நோக்கறிய  நோக்கே, நுணுக்கறிய நுண்ணறிவே என்று நாம் சொல்வோமே அதைப்போல் இசையில் நுணுக்கங்களை ஆழ்ந்து அறிந்தவர் அபரிமிதமான இசைஞானம் உடையவர். இசையின் தொழில் நுட்பங்களை நன்றாக அறிந்திருந்தார். அவர் இருக்கும் பொழுது இசையைப் பற்றி நான் அதிகமாக பேசியதில்லை ஏனென்றால் நம்முடைய அறியாமை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மதுரை சோமு, காருக்குறிச்சி அருணாச்சலம், G. N. பாலசுப்பிரமணியம், T. N. ராஜரத்னம்பிள்ளை, T. N.  சேஷகோபாலன்,  D.K. ஜெயராமன் போன்றவர்களின் பாடல்களை இவர் மிகவும் ரசித்துக் கேட்பார். யாராவது வர்ணம் பாடவில்லை என்றால் அவருக்கு பிடிக்காது. கோபம் வரும் என்று கூட சொல்லலாம். சிறு வயதில் எனக்கும், அவருக்கும் இதில் சண்டையே வந்திருக்கிறது. இசையின் நுட்பத்தை அறிந்தவர். 
எனக்கு சிறு வயதில் படிப்பு அதிகம் வந்ததில்லை. நான் மருத்துவத்தில் சேர்ந்து வைத்தியநாதன் ஐயாவை கண்டு பாடம் படிக்க துவங்கிய பொழுதுதான் மறுபிறவி எடுத்தேன் என்று சொல்லலாம். வைத்தியநாதன் ஐயா அவர்கள் எனக்கு ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், காரண சரீரம், உபதா போன்றவற்றை எல்லாம் கோடிட்டு காட்டி இருந்தார். அவருடைய மரணம் என்னை உலுக்கியது. அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இன்னும் சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த சரீரம் கட்டையில் வேகுவதற்கு முன் அது முடியவில்லையே என்று சொன்னதாக மாமி என்னிடம் கூறினார்கள். இது போன்ற விஷயங்கள் எனது வாழ்வில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனக்கும் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்ற வெறி மிக அதிகம் உள்ளது. இது பெரியப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது என்று திடமாக நம்புகிறேன். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
மருமகன்கள் (தன் அக்கா மகன்கள்) பேரில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
Dr. . மகாதேவன், Dr. சிதம்பரம் போன்றவர்கள் எல்லாம் இன்று கதறி அழுதபொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது என்ன செய்கிறான், வாழும் பொழுது என்ன செய்கிறான் என்பதன் பலனை அவன் இறந்தபோது உறவினர்கள் கதறி அழும் பொழுது உணரலாம் என்று உணர்ந்தேன். சிறு வயதில் இவர்கள் தன் தாயை இழந்தார்கள். எனது தாய் இளம் வயதில் திருமணமாகி மகாதேவ ஐயர் குடும்பத்திற்கு வந்த பொழுது இவர்களை மிகவும் நேசித்து வளர்த்தார். அன்று அந்த குடும்பம் மிகப் பெரிய குடும்பமாக இருந்தது. நான் சந்தித்த அனைவருமே அவரைப் பற்றி நல்ல வார்த்தைகளைத் தான் பேசினார்கள். சிறுவயதில் நான் எனது பெரியப்பாவிடமோ, பெரியம்மாவிடமோ, அவர்களுடைய குழந்தைகளிடமோ அதாவது எனது சகோதர சகோதரியிடமோ நெருங்கி ஒட்டியிருக்கவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குடும்பத்தின் இன்றியமையாமை மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளுதல் எவ்வளவு தேவை என்பதை எனது பெரியப்பாவின் உடலின் அருகில் இருக்கும் பொழுது எனது ஆழ்மனதில் அசைப் போட்டேன் என்பது சத்தியம். மனம் விட்டு விஷயங்களை நாம் பேச வேண்டும், காலத்தில் செய்ய வேண்டியதை காலத்தில் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையானத் தன்மை இருக்க வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது அவருடன் சென்று இருக்க வேண்டும். அவர் இறந்த பிறகு அழுவது, படம் வைத்து மாலை போடுவது அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். இனிப்பு சுவையைப் பற்றி ஒரு ஸ்லோகம் எழுதலாம் ஆனால் இனிப்பை வாயில் போட்டுக் கொள்வது போல இருக்குமா என்பதை நான் இந்த இடத்தில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
வாழ்க்கையில் நமக்கு ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மனதில் ஒரு பிம்பம் தோன்றி விடுகிறது. இந்த பிம்பமாகிய எண்ண அலைகளை உடைத்து வெளி வருவதற்கு சுய புத்தி தேவைப்படுகிறது. சுய புத்தி வெளிப்படும் பொழுது காலம் கடந்து விடுகிறது. அவர்களை நாம் இழந்து விடுகிறோம். நகரத்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் இருக்கிறதோ என்னவோ? கிராமங்களில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 
மனம் மலர வேண்டும் என்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எப்பொழுதுமே சொல்வார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனம் என்று பேசுவார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனத்தினால் தான் நல்லவற்றை மட்டும் பார்த்து மேற்கொண்டு முன்னேற முடியும். எனக்கு மனஅழுத்த நோய் என்று தெரிந்தவுடன் நான் அதை பழிக்கவில்லை, இழிக்கவில்லை. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும், மருந்து சாப்பிட்டு நான் சரியாக வேண்டும் என்று சொன்னேன். அதனால் தான் எனக்கு பல வளர்ச்சிகள் கிடைத்தது.
ஆதலால் அன்பானவர்களே உயிரோடு இருக்கும் பொழுதே  உறவினர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள், மருந்து கொடுங்கள். உயிர் போனபிறகு படத்தை மாட்டி மாலையிட்டு வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் எத்தனையோ சாஸ்திரங்களை படித்த எனக்கு உயிர் போன பிறகு என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாது. இதுவே சத்தியம். ஆனால் புத்தர் சொல்வது போல இந்த வாழ்க்கை சத்தியம். பாக்கி எல்லாமே மித்யை. நமக்கு மித்யை தேவையில்லை, மித்யையில் இருந்து விடுபடுவோம். அதற்கு அன்னை அபிராமி அருள்புரிவாளாக.
எனக்கு தமிழில் மிகுந்த பற்று அதிகம். ஒரு தமிழர் வீட்டில் மரணம் ஏற்பட்டால் நாம் படிக்க வேண்டியது திருவாசகம், பட்டினத்தாரின் மெய்ஞான புலம்பல், பாரதியார் பாடல்கள். கல்லும் கரையும் மாணிக்கவாசகரின் பாடல்கள் அவ்வாறு உள்ளன. பாரதியார் பாடல்களின் சில பகுதிகளில் சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார் என்று எழுதியுள்ளார்.
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
என்கிறார். எந்த ஒரு மனநிலை இருந்தால் இப்படி ஒரு தமிழன் எழுதியிருக்க வேண்டும்.
மரணத்தை கண்டு வெதும்பி மெய்ஞானம் பெற்று சிவனடியை அடைந்தவர்கள் பட்டினத்தடிகள். ஓம்காரானந்த ஸ்வாமிகள் ஒரு முறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது மனதின் கசடுகளை வெளியே கொண்டு வந்து விருத்தியாக்குவது பட்டினத்தடிகள் பாடல்களே என்றார். உடனே நானும் அந்த புத்தகத்தை வாங்க¤ பாடம் செய்து கொண்டிருக்கிறேன். 
கீழ்க்கண்ட பாரதியின் பாடல்களை படியுங்கள். அதுவே இவை அனைத்திற்கும் விடை.
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்
பொந்திலே யுள்ளாராம் வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின்றாராம்
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
---------------x---------------

திங்கள், 4 நவம்பர், 2013

திலீப் எனும் நண்பன்
ஒரு கண்ணீர் அஞ்சலி

அழிவினவை நீக்கி யாறுய்த் தழிவின்க
மூல்ல லுழப்பதா நட்பு
குற - 787

அன்றொரு நாள் காலை பொழுது மணி 9 இருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். பொதுவாக ஆயுர்வேதத்தை பேசுகின்ற எனக்கு சமீப காலமாக காலையில் எழும்புவதோ தினசர்யையை எனது வாழ்க்கையில் கடைபிடிப்பதோ கடினமானதாக இருக்கிறது. ஒயாமல் எனது கைபேசி ஒலித்து கொண்டிருந்தது. தூக்க மாத்திரையை சாப்பிட்ட நான் எனது கைபேசியை தேடினேன். கைபேசி இருக்கும் இடம் தெரியவில்லை. மனதில் இந்த கைபேசியை அணைத்துவிட்டு அதிகமாக ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் கையை விட்டு துலாவிப் பார்த்த பொழுது கைபேசி கிடைக்கவில்லை. மணி 9.45 க்கு ஜீவா வந்து என்னை எழுப்பினான். அநேக நாட்களில் அவன் இவ்வாறு செய்வதுண்டு. எழுந்ததும் வந்ததும் வராததுமாக நெஞ்சைப் பதற வைக்கின்ற ஒரு நிகழ்வை அவன் கூறினான். உங்களது நண்பர் திலீப் என்ற ராஜரத்னம் நேற்று இரவு விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை அவன் சொல்லிவிட்டு பெரிய பெட்ஷீட்டை மடித்து வைக்க தொடங்கினான். அவனுக்கு அது சஞ்சலமில்லாத ஒரு செயலாக இருந்திருக்கும். நிறைய நோயாளிகளைப் பார்த்த உடல்வலி, இயற்கையாகவே மனதைத் தாக்கி இருக்கின்ற விசாதம் இவற்றுடன் எழுந்து அமர்ந்தேன். இவற்றுடன் எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கேட்ட பொழுது சஜுக்கு போன் வந்தது. சஜு உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார், நீங்கள் போனை எடுக்கவில்லை என்று கூறினான்.  சஜுக்கு சிவகுமார் தகவல் அனுப்பியதாக நான் தெரிந்து கொண்டேன். YMCIA ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த ஹோட்டல் சிவகுமார் என்று நான் நினைத்தேன். இது அன்புடன் நான் சிவபழம் என்று அழைக்கின்ற YMCIA -ல் அதிகாலையில் எங்களையெல்லாம் விழித்து எழச் செய்கின்ற சிவகுமார் என்று பின்னால் அறிந்து கொண்டேன். உடனடியாக காலைக் கடனை அவசர அவசரமாக முடித்து விட்டு கீழே வந்து அமர்ந்தேன். பரபரப்பாக மனது இருந்தது. இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பதற்கான பதிலும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் திலீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வேலையில் இருந்த காரணத்தினால் எனது அழைப்பை ஏற்கவில்லை. திருப்பி அவர் பலமுறை கூப்பிட்ட பொழுது என்னுடைய மனோத் தன்மை காரணமாக நான் பின்பு பேசுகிறேன் என்று கூறிவிட்டேன். அவர் உடனே என்னுடைய மனைவி சாரதாவை கூப்பிட்டு பேசி என்னுடைய மனஅழுத்தங்களும், பிரச்சனைகளும் எல்லாம் மாறும் என்றும் நான் கூட இருக்கிறேன் என்றும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்ததாக சொன்னாள். அப்பொழுதும் நான் திலீப்பை அழைத்துப் பேசவில்லை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் சுமார் 25 வருடங்களுக்கு முன் சென்னை ராயபேட்டையில் உள்ள YMCA விடுதியில் நாங்கள் சந்தித்தது, விளையாடியது, சினிமாவுக்கு சென்றது, சாப்பிட்டது, ஒரே அறையில் தங்கி தூங்கியது போன்றவையெல்லாம் நிழல்படம் போவது போல் பசுமரத்தாணிப் போல நினைவில் வந்தது. நீண்ட உயரம், தீர்க்கமான தரிசனம், பொய் சொல்லாத ஒரு உயிர். நேர்மை, உண்மை, அஞ்சாமை, புறம் கூறாமை, சினம் கொள்ளாமை, உள்ளதை உள்ளவாறு கூறுதல், பிறருடைய இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல், தற்புகழ்ச்சி இல்லாமை போன்றவற்றில் எல்லாம் தன் நிகரற்றவராக அவர் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. M.Com, ICWAI, ACS 
என்ற உயர்ந்த படிப்புகளையெல்லாம் சர்வ லகுவாக எந்தவித கடினமும் இன்றி கற்று தேர்ந்தார். சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக அவருக்கு இருந்தது. 


இப்பேர்ப்பட்ட மனிதர் இன்று நம்முடன் இல்லை. அந்த ஆஜானபாகுவான உருவம், வெள்ளை சிவப்பு நிறம் கலந்த உடம்பு, சிரித்துப் பேசும் தன்மை, தட்டிக் கொடுக்கும் மனோபாவம், இத்தகைய மனிதரை இனி ஸ்தூல சரீரத்தில் நம்மால் காண இயலாது. காலம் என்கின்ற மகா மாயை பல சந்தர்ப்பங்களிலும் கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பல பெரியவர்கள் கலியில் கோரமான மரணத்தை கண்டிருக்கிறார்கள். அகால ம்ருத்யூ, அப ம்ருத்யூவே அவர்களை வாட்டி இருக்கிறது. பல அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் கொழுப்பேறி வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் நல்லவர்கள், விபத்துகளிலும், புற்று போன்ற நோய்களிலும் இறப்பதை நாம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
பிறப்பதும், இறப்பதும் இயற்கை நிலை. முதலில் தோன்றுகின்ற உருவத் தோற்றங்கள் சிலக் காலம் நிலவி மருவிப் போகின்றன. அவ்வாறு மறைதலை நாம் இறப்பு என்கின்றோம். இது விழிப்பும், உறக்கமும் போன்றது. 

“உறங்குவதும் போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பதும் போலும் பிறப்பு“
என்கிறது குறள் 339

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது
மணிமேகலை 16 

சாவதும் ஒருவகை உறக்கம். இவ்வாறு பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகின்றன என்பதை சிவஞான சித்தியார், சீவக சிந்தாமணி, இராமாயணம், பாரதம் பிரபுலிங்க லீலை, சேதுபுராணம் போன்றவை விளக்குகின்றன. 
பிறந்த ஒரோர் மனிதனும் வளர்ந்து வருகிறான் ஆனால் அவ்வளர்ச்சி சாவை நோக்கியே நடந்து வருகிறது. ஆயுள் ஒரோர் நிமிடமும் தேய்ந்து வருகிறது. நிலையாமையே நிலையானது. மரணம் உயிர்வாழ்வின் முன்னறிப்பாக உள்ளது என்கிறார் புக்கர். நல்ல சிந்தனையோடு புனிதமாய் வாழ்கின்றவனுக்கு இன்மையும், மறுமையும் இல்லை. எனது திலீப்பும் அவ்வாறே வாழ்ந்தவர் இதற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவை இல்லை.
வையக வாழ்வை விட வானக வாழ்வு அவருக்கு மேன்மையாய் அமையும். இதுவும் திண்ணம். இதில் சந்தேகமும் இல்லை. சிவ ஒளி அவர்பால் மேவி நிற்கும் அதில் அவர் உயிர் மிளிரும் அதற்கும் சந்தேகம் இல்லை. மரணத்திற்கு அவர் அஞ்சியது இல்லை இது உயிரோடு கலந்த எனக்கு தெரியும். வாழ்வில் அவர் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை. கஷ்டம் இப்பொழுது நமக்குதான். மனம், மொழி, மெய்யில் அவர் புனிதமாய் இருந்தார். புண்ணியம் செய்த ஆத்மா அவர். உடல் நிலையற்றது என்பதை அவர் அன்றே அறிந்திருந்தார். அந்த எண்ண தோற்றங்களை பல சந்தர்ப்பங்களில் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு அச்சம் இல்லை. அச்சம் கொச்சையாக இருந்தது. அவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் எண்ணற்றன. விவேகமற்ற செயல்களை அவர் செய்ததில்லை. ஊழிப்படி செயல்கள் நடந்தது. அது முடிந்துவிட்டது. அது இயற்கை நியதி அந்த இயல்பை அவர் உணர்ந்திருந்தார். கீதையும் இதையே பேசுகிறது. அவர் எடுத்தப் பிறவியில் நல்லதையே செய்திருக்கிறார். பாக்கியவனாக சிறந்து விளங்கினார். பிறருடைய உள்ளத்தை கவர்ந்தார். மனிதரில் மேன்மையானவனாக இருந்தார். 
இறப்பு ஒருநாளும் அவர் நினைவுகளை அழிக்காது. புல்லின் நுனியில் உள்ள பனித்துளிப் போல் அவர் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆதி சங்கரர் குறுகிய காலமே வாழ்ந்தார் குறுகிய காலமே வாழ்ந்தார். மகாகவ¤ சுப்பிரமணிய பாரதியார் குறுகிய காலமே வாழ்ந்தார், காருக்குறிச்சி அருணாச்சலம் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் இன்றும் அவர்களைப் பற்றி பேசுகிறோம். நாம் திலீப்பின் நற்குணங்களைப் பற்றி என்றும் பேசுவோம். எங்கெங்கு நற்குணங்களும், நட்பும் பிரிக்காத முடியாமல் இருக்கின்றதோ அங்கு திலீப் இருப்பார். 20 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். அவர் நித்திய முக்தனாகவே திகழுவார். அவர் நம்மைப் பொறுத்த வரை ஒரு ஞான வீரன். வானுலகில் உய்த்து வாழ்கிறார். யாருக்கும் அவர் பயப்படவில்லை, இவரை கண்டு பிறர் பயந்தனர். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு மகான். இன்றும் அழியாத பேருலக கதவுத் திறக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கிறார். மதி நலம் மிக்க மனிதப் பிறப்பை அவர் வாழ்ந்தார். வாழ்வில் பொன்னான காலம் வீணாகியது. வேலைக்கு போகவில்லை, பொருள் ஈட்டவில்லை, குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அவருக்காக வாழவில்லை, பிறருக்காக வாழ்ந்தார், இறுதியில் குறிக்கோளோடு வாழ்ந்தவர். இறுதி நிலையில் நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். கூரிய அறிவும், சீரிய கருத்தும், சிறந்த குறிக்கோளும் அவர் வாழ்க்கையை மகிமைப்படுத்தி வந்தன. கூட்டை விட்டு பிரிந்தப் பறவைப் போல உடம்பை விட்டு அவர் பிரிந்து போனார். என்னுடைய சகோதரர், நண்பர் சிலகாலம் உலவித் திரிந்த பொழுதிலும் இன்று அருவமாகி இருக்கின்ற நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை யாருடைய மனதையும் விட்டுப் பிரியாது. அறம்சார் தர்மம் நற்கதியையே அவருக்கு கொடுக்கும். நரக வேதனை என்பது அவருக்கு கிடையாது. அவர் அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்து விட்டார். பரமசிவனே இந்தப் பசுவை உன்னுள் சேர்த்துக் கொள்ளும் அப்பா என்று கலங்கி நான் பிரார்த்தனை செய்கிறேன். என் சகோதரியின் மனதிற்கு பிரார்த்தனை செய்கிறேன். 
இதற்கு காரணம் நமக்கு தெரியாது. கர்மா என்று சொல்லிவிடலாம் ஆனால் நிரூபிக்க முடியாது. சாபம் என்று சொல்லிவிடலாம் அதையும் நிரூபிக்க முடியாது. இப்படி நிரூபிக்க முடியாத நிலையில் கண்ணெதிரே ஒரு மரணத்தை காண்கின்ற பொழுது வள்ளுவர் தான் நமக்கு கைக்கொடுக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி எழுவதும் போலும் பிறப்பு என்கிறார். ஆற்று வெள்ளம் அடித்துச் செல்வது போல உயிர் பிரிந்து விட்டது ஆனால் இருப்பவர்கள் சொல்லொணா துயரில் அவதிப்படுகிறார்கள். எனது சகோதரி திருமதி. ராஜரத்னம் அன்பே வடிவான அவரது அன்னையார் அவர்களை நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. புத்திரனின் மரணத்தை தாயார் காண்பது கொடூரத்தின் கொடூரம். திருமதி. ராஜரத்னம் கதறி அழுதப் பொழுது என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த உயிர் எங்கு இருக்குமோ, என்ன செய்து கொண்டிருக்குமோ, அதற்கு தவிப்பு உண்டா, அது இரண்ணிய கர்ப்பத்திற்கு போகுமா, அதற்கு அமைதி உண்டா, அது மறுபிறப்பு எடுக்குமா இவை ஒன்றும் நம்மால் விடைசொல்லா முடியாத பதில். ஆனால் ராஜரத்னம் என்ற மனிதப்பண்பு அவருடைய ஒழுக்கம் என்றென்றும் எங்களுடைய இதயத்திலாவது நிலைத்து இருக்கும். 
மரணமே உன்னை ஒரு மரணம் வந்து தழுவாதா? விபத்தே உன்னை ஒரு விபத்து தழுவாதா? துக்கமே உன்னை ஒரு துக்கம் சூழாதா, பரிதவிப்பே நீ ஒரு நாள் பரிதவிக்க மாட்டாயா? என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிஷக் உத்தமன்

மருத்துவர் இல. மகாதேவன் - பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்) 
கட்டுரை - மருத்துவர். சுனீல் கிருஷ்ணன்
இக்கட்டுரையை காண   http://solvanam.com கிளிக்கவும்.

செவ்வாய், 4 ஜூன், 2013

Malaysia visit

Dr.L.Mahadevan visited Malaysia, from May 2nd to May 4th to deliver his treasured classes on ayurveda, at BKS Iyengar Yogashala, Kuala lumpur. The classes were about “Ayurveda, the traditional Indian medicine”.  The doctors practicing allopathic system and other traditional medicinal systems were the participants. Dr.Mahadevan’s class covered all  basics of ayurveda, including the topics like ayurveda and philosophy, understanding the mind, body constitution in ayurveda, dietetics in ayurveda, , agni and its importance and preventive medicines in ayurveda. There were about 100 doctors in his class. The feedback of the classes were excellent.