திங்கள், 29 செப்டம்பர், 2014

Rama Sarma - என்று நான் காண்பேன் இனி

என்று நான் காண்பேன் இனி
          “I am Rama Sarma”  என்று பொலிவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எனது பெரியப்பா அன்பிற்குரிய சிவத்திரு. ராம சர்மா அவர்கள் 18.9.2014 அன்று இறையடி அடைந்தார்கள் என்ற செய்தியைக கேட்டு சொல்லணா துயரம் அடைந்தேன்.
          அதிகாலை 6 மணியளவில் எனது தாயார் ‘மகாதேவா’ என்று அலறியதைக் கேட்டு எனது அப்பாவுக்குத்தான் ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சி கீழே வந்தபொழுது இந்த அதிர்ச்சி செய்தியானது சென்னையில் இருந்து வந்திருந்தது. திரு. ராம சர்மாவிற்கு இறக்கும்பொழுது வயது 74. அவரும், எனது அப்பாவும் இரட்டைக் குழந்தைகள்.
          Fraternal twins என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு ஒரே போல் இருக்க மாட்டார்கள். குணாதிசயங்களும் சற்றே வேறுபட்டுத்தான் இருக்கும். எனது தகப்பனாருக்கும் சரி, பெரியப்பாவிற்கும் சரி ஒருவருக்கொருவர் இடையில் அன்பும், பாசமும் உள்ளுணர்வும் மிகுந்திருந்தது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டதை அபூர்வமாகவே நான் பார்த்திருக்கிறேன்.
          திரு. ராம சர்மா அவர்கள் ஒரு எளிமையான மனிதர். வாழ்க்கையில் அத்யயனம் (படித்தல்), அத்யாபனம் (படிப்பித்தல்), ஸத்வித்யா சம்பாஷணம் (படித்தவர்களுடன் உரையாடுதல்) என்று சரகர் கூறும் மூன்று விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர். இவற்றை அவர் சந்தோஷத்துடன் செய்து கொண்டிருந்தார். இறுதி மூச்சு வரை அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மரணப் படுக்கையில் பீஷ்மரைப் போல அவரை கிடத்துக்கின்ற பொழுது அவரை சுற்றி மாணவர் கூட்டமே அதிகமாக இருந்தது. ஒரோர் மாணவரின் இருதயக் கூட்டை அவர் தன் பாடத் திறமையினாலும், அன்பினாலும் ஆட்கொண்டிருந்தார் என்பதை என்னால் உணர முடிந்தது. எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்லுவார். ஒரு சாக்கை விரித்து அதிலேயே படுத்துத்  தூங்கி விடுவார். சாப்பாட்டில் கூட இது தான் வேண்டும், அது தான் வேண்டும் என்று கிடையாது. எது கிடைத்ததோ அதையே சாப்பிடுவார். ஹோட்டலில் போய் சாப்பிடுகின்ற பழக்கம் கிடையாது. இல்லையென்றால் 4 வாழைப் பழங்களை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை குடித்து விடுவார். வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களிலேயே அவருக்கு சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்றவை வந்தன. ஆரம்ப காலத்தில் புகையிலைப் பழக்கம் சற்று இருந்தது. ஆதலால் பக்கவாத நோய் வந்து பேச்சு தடைபட்டது. ஆனால் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். நமக்கு ஒரு நோய் வந்துவிட்டதே, மீண்டும் வந்துவிடக் கூடாதே என்ற எண்ணமோ, பயமோ நான் அவரிடம் கண்டதில்லை. Dr. டைனி நாயரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் கூறுகின்ற விஷயங்களைக் கேட்டு அப்படியே செய்வார். இரண்டு தினங்களுக்கு முன்புதான் எனது பெரியப்பாவுக்கும் பெரியம்மா திருமதி. ஜெயலெட்சுமிக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் பூர்த்தியாகி இருந்தது. 50 வருட திருமண வாழ்க்கை என்பது ஸனாதன தர்மத்தில் ஒரு ஆன்மீக சாதனை என்றே குறிப்பிடலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களை வாழ்க்கையின் இலட்சியமாக வகுத்துக் கொண்ட ஒரு புருஷன் வானப்ரஸ்தாஸ்ரமத்தில் சென்று வாழ்க்கையின் இறுதியை அடைய காலடி எடுத்து வைக்கும் சமயம் இது.
இவர் பழகுவதற்கு எளிமையானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய மூத்த மகனுக்கும் என்னுடைய பெயர்தான் - மகாதேவன்.
          பெரியப்பாவின் இசையறிவு ஒப்பில்லாதது. நோக்கறிய  நோக்கே, நுணுக்கறிய நுண்ணறிவே என்று நாம் சொல்வோமே அதைப்போல் இசையில் நுணுக்கங்களை ஆழ்ந்து அறிந்தவர் அபரிமிதமான இசைஞானம் உடையவர். இசையின் தொழில் நுட்பங்களை நன்றாக அறிந்திருந்தார். அவர் இருக்கும் பொழுது இசையைப் பற்றி நான் அதிகமாக பேசியதில்லை ஏனென்றால் நம்முடைய அறியாமை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மதுரை சோமு, காருக்குறிச்சி அருணாச்சலம், G. N. பாலசுப்பிரமணியம், T. N. ராஜரத்னம்பிள்ளை, T. N.  சேஷகோபாலன்,  D.K. ஜெயராமன் போன்றவர்களின் பாடல்களை இவர் மிகவும் ரசித்துக் கேட்பார். யாராவது வர்ணம் பாடவில்லை என்றால் அவருக்கு பிடிக்காது. கோபம் வரும் என்று கூட சொல்லலாம். சிறு வயதில் எனக்கும், அவருக்கும் இதில் சண்டையே வந்திருக்கிறது. இசையின் நுட்பத்தை அறிந்தவர். 
எனக்கு சிறு வயதில் படிப்பு அதிகம் வந்ததில்லை. நான் மருத்துவத்தில் சேர்ந்து வைத்தியநாதன் ஐயாவை கண்டு பாடம் படிக்க துவங்கிய பொழுதுதான் மறுபிறவி எடுத்தேன் என்று சொல்லலாம். வைத்தியநாதன் ஐயா அவர்கள் எனக்கு ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், காரண சரீரம், உபதா போன்றவற்றை எல்லாம் கோடிட்டு காட்டி இருந்தார். அவருடைய மரணம் என்னை உலுக்கியது. அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இன்னும் சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த சரீரம் கட்டையில் வேகுவதற்கு முன் அது முடியவில்லையே என்று சொன்னதாக மாமி என்னிடம் கூறினார்கள். இது போன்ற விஷயங்கள் எனது வாழ்வில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனக்கும் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்ற வெறி மிக அதிகம் உள்ளது. இது பெரியப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது என்று திடமாக நம்புகிறேன். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
மருமகன்கள் (தன் அக்கா மகன்கள்) பேரில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
Dr. . மகாதேவன், Dr. சிதம்பரம் போன்றவர்கள் எல்லாம் இன்று கதறி அழுதபொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது என்ன செய்கிறான், வாழும் பொழுது என்ன செய்கிறான் என்பதன் பலனை அவன் இறந்தபோது உறவினர்கள் கதறி அழும் பொழுது உணரலாம் என்று உணர்ந்தேன். சிறு வயதில் இவர்கள் தன் தாயை இழந்தார்கள். எனது தாய் இளம் வயதில் திருமணமாகி மகாதேவ ஐயர் குடும்பத்திற்கு வந்த பொழுது இவர்களை மிகவும் நேசித்து வளர்த்தார். அன்று அந்த குடும்பம் மிகப் பெரிய குடும்பமாக இருந்தது. நான் சந்தித்த அனைவருமே அவரைப் பற்றி நல்ல வார்த்தைகளைத் தான் பேசினார்கள். சிறுவயதில் நான் எனது பெரியப்பாவிடமோ, பெரியம்மாவிடமோ, அவர்களுடைய குழந்தைகளிடமோ அதாவது எனது சகோதர சகோதரியிடமோ நெருங்கி ஒட்டியிருக்கவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குடும்பத்தின் இன்றியமையாமை மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளுதல் எவ்வளவு தேவை என்பதை எனது பெரியப்பாவின் உடலின் அருகில் இருக்கும் பொழுது எனது ஆழ்மனதில் அசைப் போட்டேன் என்பது சத்தியம். மனம் விட்டு விஷயங்களை நாம் பேச வேண்டும், காலத்தில் செய்ய வேண்டியதை காலத்தில் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையானத் தன்மை இருக்க வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது அவருடன் சென்று இருக்க வேண்டும். அவர் இறந்த பிறகு அழுவது, படம் வைத்து மாலை போடுவது அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். இனிப்பு சுவையைப் பற்றி ஒரு ஸ்லோகம் எழுதலாம் ஆனால் இனிப்பை வாயில் போட்டுக் கொள்வது போல இருக்குமா என்பதை நான் இந்த இடத்தில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
வாழ்க்கையில் நமக்கு ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மனதில் ஒரு பிம்பம் தோன்றி விடுகிறது. இந்த பிம்பமாகிய எண்ண அலைகளை உடைத்து வெளி வருவதற்கு சுய புத்தி தேவைப்படுகிறது. சுய புத்தி வெளிப்படும் பொழுது காலம் கடந்து விடுகிறது. அவர்களை நாம் இழந்து விடுகிறோம். நகரத்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் இருக்கிறதோ என்னவோ? கிராமங்களில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 
மனம் மலர வேண்டும் என்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எப்பொழுதுமே சொல்வார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனம் என்று பேசுவார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனத்தினால் தான் நல்லவற்றை மட்டும் பார்த்து மேற்கொண்டு முன்னேற முடியும். எனக்கு மனஅழுத்த நோய் என்று தெரிந்தவுடன் நான் அதை பழிக்கவில்லை, இழிக்கவில்லை. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும், மருந்து சாப்பிட்டு நான் சரியாக வேண்டும் என்று சொன்னேன். அதனால் தான் எனக்கு பல வளர்ச்சிகள் கிடைத்தது.
ஆதலால் அன்பானவர்களே உயிரோடு இருக்கும் பொழுதே  உறவினர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள், மருந்து கொடுங்கள். உயிர் போனபிறகு படத்தை மாட்டி மாலையிட்டு வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் எத்தனையோ சாஸ்திரங்களை படித்த எனக்கு உயிர் போன பிறகு என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாது. இதுவே சத்தியம். ஆனால் புத்தர் சொல்வது போல இந்த வாழ்க்கை சத்தியம். பாக்கி எல்லாமே மித்யை. நமக்கு மித்யை தேவையில்லை, மித்யையில் இருந்து விடுபடுவோம். அதற்கு அன்னை அபிராமி அருள்புரிவாளாக.
எனக்கு தமிழில் மிகுந்த பற்று அதிகம். ஒரு தமிழர் வீட்டில் மரணம் ஏற்பட்டால் நாம் படிக்க வேண்டியது திருவாசகம், பட்டினத்தாரின் மெய்ஞான புலம்பல், பாரதியார் பாடல்கள். கல்லும் கரையும் மாணிக்கவாசகரின் பாடல்கள் அவ்வாறு உள்ளன. பாரதியார் பாடல்களின் சில பகுதிகளில் சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார் என்று எழுதியுள்ளார்.
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
என்கிறார். எந்த ஒரு மனநிலை இருந்தால் இப்படி ஒரு தமிழன் எழுதியிருக்க வேண்டும்.
மரணத்தை கண்டு வெதும்பி மெய்ஞானம் பெற்று சிவனடியை அடைந்தவர்கள் பட்டினத்தடிகள். ஓம்காரானந்த ஸ்வாமிகள் ஒரு முறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது மனதின் கசடுகளை வெளியே கொண்டு வந்து விருத்தியாக்குவது பட்டினத்தடிகள் பாடல்களே என்றார். உடனே நானும் அந்த புத்தகத்தை வாங்க¤ பாடம் செய்து கொண்டிருக்கிறேன். 
கீழ்க்கண்ட பாரதியின் பாடல்களை படியுங்கள். அதுவே இவை அனைத்திற்கும் விடை.
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்
பொந்திலே யுள்ளாராம் வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின்றாராம்
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
---------------x---------------

1 கருத்து: