திங்கள், 4 நவம்பர், 2013

திலீப் எனும் நண்பன்
ஒரு கண்ணீர் அஞ்சலி

அழிவினவை நீக்கி யாறுய்த் தழிவின்க
மூல்ல லுழப்பதா நட்பு
குற - 787

அன்றொரு நாள் காலை பொழுது மணி 9 இருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். பொதுவாக ஆயுர்வேதத்தை பேசுகின்ற எனக்கு சமீப காலமாக காலையில் எழும்புவதோ தினசர்யையை எனது வாழ்க்கையில் கடைபிடிப்பதோ கடினமானதாக இருக்கிறது. ஒயாமல் எனது கைபேசி ஒலித்து கொண்டிருந்தது. தூக்க மாத்திரையை சாப்பிட்ட நான் எனது கைபேசியை தேடினேன். கைபேசி இருக்கும் இடம் தெரியவில்லை. மனதில் இந்த கைபேசியை அணைத்துவிட்டு அதிகமாக ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் கையை விட்டு துலாவிப் பார்த்த பொழுது கைபேசி கிடைக்கவில்லை. மணி 9.45 க்கு ஜீவா வந்து என்னை எழுப்பினான். அநேக நாட்களில் அவன் இவ்வாறு செய்வதுண்டு. எழுந்ததும் வந்ததும் வராததுமாக நெஞ்சைப் பதற வைக்கின்ற ஒரு நிகழ்வை அவன் கூறினான். உங்களது நண்பர் திலீப் என்ற ராஜரத்னம் நேற்று இரவு விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை அவன் சொல்லிவிட்டு பெரிய பெட்ஷீட்டை மடித்து வைக்க தொடங்கினான். அவனுக்கு அது சஞ்சலமில்லாத ஒரு செயலாக இருந்திருக்கும். நிறைய நோயாளிகளைப் பார்த்த உடல்வலி, இயற்கையாகவே மனதைத் தாக்கி இருக்கின்ற விசாதம் இவற்றுடன் எழுந்து அமர்ந்தேன். இவற்றுடன் எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கேட்ட பொழுது சஜுக்கு போன் வந்தது. சஜு உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார், நீங்கள் போனை எடுக்கவில்லை என்று கூறினான்.  சஜுக்கு சிவகுமார் தகவல் அனுப்பியதாக நான் தெரிந்து கொண்டேன். YMCIA ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த ஹோட்டல் சிவகுமார் என்று நான் நினைத்தேன். இது அன்புடன் நான் சிவபழம் என்று அழைக்கின்ற YMCIA -ல் அதிகாலையில் எங்களையெல்லாம் விழித்து எழச் செய்கின்ற சிவகுமார் என்று பின்னால் அறிந்து கொண்டேன். உடனடியாக காலைக் கடனை அவசர அவசரமாக முடித்து விட்டு கீழே வந்து அமர்ந்தேன். பரபரப்பாக மனது இருந்தது. இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பதற்கான பதிலும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் திலீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வேலையில் இருந்த காரணத்தினால் எனது அழைப்பை ஏற்கவில்லை. திருப்பி அவர் பலமுறை கூப்பிட்ட பொழுது என்னுடைய மனோத் தன்மை காரணமாக நான் பின்பு பேசுகிறேன் என்று கூறிவிட்டேன். அவர் உடனே என்னுடைய மனைவி சாரதாவை கூப்பிட்டு பேசி என்னுடைய மனஅழுத்தங்களும், பிரச்சனைகளும் எல்லாம் மாறும் என்றும் நான் கூட இருக்கிறேன் என்றும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்ததாக சொன்னாள். அப்பொழுதும் நான் திலீப்பை அழைத்துப் பேசவில்லை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் சுமார் 25 வருடங்களுக்கு முன் சென்னை ராயபேட்டையில் உள்ள YMCA விடுதியில் நாங்கள் சந்தித்தது, விளையாடியது, சினிமாவுக்கு சென்றது, சாப்பிட்டது, ஒரே அறையில் தங்கி தூங்கியது போன்றவையெல்லாம் நிழல்படம் போவது போல் பசுமரத்தாணிப் போல நினைவில் வந்தது. நீண்ட உயரம், தீர்க்கமான தரிசனம், பொய் சொல்லாத ஒரு உயிர். நேர்மை, உண்மை, அஞ்சாமை, புறம் கூறாமை, சினம் கொள்ளாமை, உள்ளதை உள்ளவாறு கூறுதல், பிறருடைய இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல், தற்புகழ்ச்சி இல்லாமை போன்றவற்றில் எல்லாம் தன் நிகரற்றவராக அவர் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. M.Com, ICWAI, ACS 
என்ற உயர்ந்த படிப்புகளையெல்லாம் சர்வ லகுவாக எந்தவித கடினமும் இன்றி கற்று தேர்ந்தார். சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக அவருக்கு இருந்தது. 


இப்பேர்ப்பட்ட மனிதர் இன்று நம்முடன் இல்லை. அந்த ஆஜானபாகுவான உருவம், வெள்ளை சிவப்பு நிறம் கலந்த உடம்பு, சிரித்துப் பேசும் தன்மை, தட்டிக் கொடுக்கும் மனோபாவம், இத்தகைய மனிதரை இனி ஸ்தூல சரீரத்தில் நம்மால் காண இயலாது. காலம் என்கின்ற மகா மாயை பல சந்தர்ப்பங்களிலும் கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பல பெரியவர்கள் கலியில் கோரமான மரணத்தை கண்டிருக்கிறார்கள். அகால ம்ருத்யூ, அப ம்ருத்யூவே அவர்களை வாட்டி இருக்கிறது. பல அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் கொழுப்பேறி வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் நல்லவர்கள், விபத்துகளிலும், புற்று போன்ற நோய்களிலும் இறப்பதை நாம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
பிறப்பதும், இறப்பதும் இயற்கை நிலை. முதலில் தோன்றுகின்ற உருவத் தோற்றங்கள் சிலக் காலம் நிலவி மருவிப் போகின்றன. அவ்வாறு மறைதலை நாம் இறப்பு என்கின்றோம். இது விழிப்பும், உறக்கமும் போன்றது. 

“உறங்குவதும் போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பதும் போலும் பிறப்பு“
என்கிறது குறள் 339

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது
மணிமேகலை 16 

சாவதும் ஒருவகை உறக்கம். இவ்வாறு பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகின்றன என்பதை சிவஞான சித்தியார், சீவக சிந்தாமணி, இராமாயணம், பாரதம் பிரபுலிங்க லீலை, சேதுபுராணம் போன்றவை விளக்குகின்றன. 
பிறந்த ஒரோர் மனிதனும் வளர்ந்து வருகிறான் ஆனால் அவ்வளர்ச்சி சாவை நோக்கியே நடந்து வருகிறது. ஆயுள் ஒரோர் நிமிடமும் தேய்ந்து வருகிறது. நிலையாமையே நிலையானது. மரணம் உயிர்வாழ்வின் முன்னறிப்பாக உள்ளது என்கிறார் புக்கர். நல்ல சிந்தனையோடு புனிதமாய் வாழ்கின்றவனுக்கு இன்மையும், மறுமையும் இல்லை. எனது திலீப்பும் அவ்வாறே வாழ்ந்தவர் இதற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவை இல்லை.
வையக வாழ்வை விட வானக வாழ்வு அவருக்கு மேன்மையாய் அமையும். இதுவும் திண்ணம். இதில் சந்தேகமும் இல்லை. சிவ ஒளி அவர்பால் மேவி நிற்கும் அதில் அவர் உயிர் மிளிரும் அதற்கும் சந்தேகம் இல்லை. மரணத்திற்கு அவர் அஞ்சியது இல்லை இது உயிரோடு கலந்த எனக்கு தெரியும். வாழ்வில் அவர் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை. கஷ்டம் இப்பொழுது நமக்குதான். மனம், மொழி, மெய்யில் அவர் புனிதமாய் இருந்தார். புண்ணியம் செய்த ஆத்மா அவர். உடல் நிலையற்றது என்பதை அவர் அன்றே அறிந்திருந்தார். அந்த எண்ண தோற்றங்களை பல சந்தர்ப்பங்களில் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு அச்சம் இல்லை. அச்சம் கொச்சையாக இருந்தது. அவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் எண்ணற்றன. விவேகமற்ற செயல்களை அவர் செய்ததில்லை. ஊழிப்படி செயல்கள் நடந்தது. அது முடிந்துவிட்டது. அது இயற்கை நியதி அந்த இயல்பை அவர் உணர்ந்திருந்தார். கீதையும் இதையே பேசுகிறது. அவர் எடுத்தப் பிறவியில் நல்லதையே செய்திருக்கிறார். பாக்கியவனாக சிறந்து விளங்கினார். பிறருடைய உள்ளத்தை கவர்ந்தார். மனிதரில் மேன்மையானவனாக இருந்தார். 
இறப்பு ஒருநாளும் அவர் நினைவுகளை அழிக்காது. புல்லின் நுனியில் உள்ள பனித்துளிப் போல் அவர் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆதி சங்கரர் குறுகிய காலமே வாழ்ந்தார் குறுகிய காலமே வாழ்ந்தார். மகாகவ¤ சுப்பிரமணிய பாரதியார் குறுகிய காலமே வாழ்ந்தார், காருக்குறிச்சி அருணாச்சலம் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் இன்றும் அவர்களைப் பற்றி பேசுகிறோம். நாம் திலீப்பின் நற்குணங்களைப் பற்றி என்றும் பேசுவோம். எங்கெங்கு நற்குணங்களும், நட்பும் பிரிக்காத முடியாமல் இருக்கின்றதோ அங்கு திலீப் இருப்பார். 20 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். அவர் நித்திய முக்தனாகவே திகழுவார். அவர் நம்மைப் பொறுத்த வரை ஒரு ஞான வீரன். வானுலகில் உய்த்து வாழ்கிறார். யாருக்கும் அவர் பயப்படவில்லை, இவரை கண்டு பிறர் பயந்தனர். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு மகான். இன்றும் அழியாத பேருலக கதவுத் திறக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கிறார். மதி நலம் மிக்க மனிதப் பிறப்பை அவர் வாழ்ந்தார். வாழ்வில் பொன்னான காலம் வீணாகியது. வேலைக்கு போகவில்லை, பொருள் ஈட்டவில்லை, குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அவருக்காக வாழவில்லை, பிறருக்காக வாழ்ந்தார், இறுதியில் குறிக்கோளோடு வாழ்ந்தவர். இறுதி நிலையில் நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். கூரிய அறிவும், சீரிய கருத்தும், சிறந்த குறிக்கோளும் அவர் வாழ்க்கையை மகிமைப்படுத்தி வந்தன. கூட்டை விட்டு பிரிந்தப் பறவைப் போல உடம்பை விட்டு அவர் பிரிந்து போனார். என்னுடைய சகோதரர், நண்பர் சிலகாலம் உலவித் திரிந்த பொழுதிலும் இன்று அருவமாகி இருக்கின்ற நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை யாருடைய மனதையும் விட்டுப் பிரியாது. அறம்சார் தர்மம் நற்கதியையே அவருக்கு கொடுக்கும். நரக வேதனை என்பது அவருக்கு கிடையாது. அவர் அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்து விட்டார். பரமசிவனே இந்தப் பசுவை உன்னுள் சேர்த்துக் கொள்ளும் அப்பா என்று கலங்கி நான் பிரார்த்தனை செய்கிறேன். என் சகோதரியின் மனதிற்கு பிரார்த்தனை செய்கிறேன். 
இதற்கு காரணம் நமக்கு தெரியாது. கர்மா என்று சொல்லிவிடலாம் ஆனால் நிரூபிக்க முடியாது. சாபம் என்று சொல்லிவிடலாம் அதையும் நிரூபிக்க முடியாது. இப்படி நிரூபிக்க முடியாத நிலையில் கண்ணெதிரே ஒரு மரணத்தை காண்கின்ற பொழுது வள்ளுவர் தான் நமக்கு கைக்கொடுக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி எழுவதும் போலும் பிறப்பு என்கிறார். ஆற்று வெள்ளம் அடித்துச் செல்வது போல உயிர் பிரிந்து விட்டது ஆனால் இருப்பவர்கள் சொல்லொணா துயரில் அவதிப்படுகிறார்கள். எனது சகோதரி திருமதி. ராஜரத்னம் அன்பே வடிவான அவரது அன்னையார் அவர்களை நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. புத்திரனின் மரணத்தை தாயார் காண்பது கொடூரத்தின் கொடூரம். திருமதி. ராஜரத்னம் கதறி அழுதப் பொழுது என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த உயிர் எங்கு இருக்குமோ, என்ன செய்து கொண்டிருக்குமோ, அதற்கு தவிப்பு உண்டா, அது இரண்ணிய கர்ப்பத்திற்கு போகுமா, அதற்கு அமைதி உண்டா, அது மறுபிறப்பு எடுக்குமா இவை ஒன்றும் நம்மால் விடைசொல்லா முடியாத பதில். ஆனால் ராஜரத்னம் என்ற மனிதப்பண்பு அவருடைய ஒழுக்கம் என்றென்றும் எங்களுடைய இதயத்திலாவது நிலைத்து இருக்கும். 
மரணமே உன்னை ஒரு மரணம் வந்து தழுவாதா? விபத்தே உன்னை ஒரு விபத்து தழுவாதா? துக்கமே உன்னை ஒரு துக்கம் சூழாதா, பரிதவிப்பே நீ ஒரு நாள் பரிதவிக்க மாட்டாயா? என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.