தனக்குவமை இல்லாதான்
வாழ்வாங்கு வாழ்ந்தவர்
தாயாகி தந்தையுமாய் தாங்கி நின்ற தெய்வம்
குருவாய் வந்து அருள் செய்த குகன்
1997 என்று நினைக்கிறேன். நான் ஆயுர்வேதத்தில் முதுகலை பட்டப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்க போகும் தருணம். அந்த நேரத்தில் அடுத்து என்ன செய்வது, குலத் தொழிலை தொடர்ந்து செய்வதா அல்லது புதிய இடங்களில் வேலைக்கு செல்வதா அல்லது ஒரு கல்லூரியில் ஆசிரியராக போவதா என்று குழம்பி போய் இருந்த நேரத்தில் என்னிடம் மிகவும் அன்பும், பரிவும் காட்டுகின்ற சித்தப்பா ஒருவர் அவருடைய ஒன்று விட்ட சகோதரரிடம் என்னை அழைத்து சென்றார். அவர் என்னை, உனது மனத்தன்மைக்கும், தேவைக்கும் பொருந்தும் இடம் இருக்கிறது என்று சொல்லி ஆனைக்கட்டி ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார். அன்று தான் கருணைக் கடலாகிய வாழும் தட்சிணாமூர்த்தியாகிய மறைப் பொருளாய் மறைந்து நிற்கும் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற ஒரு உத்தம துறவியைக் கண்டேன். ஆயுர்வேதம் படித்த மாணவன், ஒரு இளைஞன் என்று சொன்னவுடன் கருணையுடன் பேசி இனிப்பை எடுத்துக் கொடுத்தார். ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணவு அருந்திவிட்டு போங்கள் என்று அவர் சொன்னார். மனதிற்குள் ஒரு ஆழ்ந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்பொழுது அவர் சொன்னார் சென்னையில் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தொடங்கி இருக்கின்ற கல்லூரிக்கு உனக்கு கடிதம் தருகிறேன். நீ அங்கு போய் வேலையில் சேர்ந்துவிடு என்று சொன்னார். நான் வீட்டிற்கு வந்து தவத்திரு ஸ்வாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் அந்த இடத்திற்கு சென்று வந்தேன். அந்த நாட்களில் அதிகம் நோயாளிகள் இல்லை, ஆதலால் எனக்கு அங்கு செல்ல மனமில்லை என்பதை எடுத்துரைத்தேன். அந்த கடிதத்திற்கு பதில் எழுதிய கருணாமூர்த்தி உன் தாத்தாவின் தொழிலையே அபிவிருத்தி செய்து நடத்து, மேலும் விருத்தி செய், நான் வந்து திறந்து வைக்கிறேன் என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் அவர் காட்டிய பாங்கு இது.
நான் தெரிசனங்கோப்பு கிராமத்திற்கு வந்து பல குடும்ப சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் இடையே எனது தந்தையார் உதவியுடன் ஆறு அறைகளும், இரண்டு பஞ்சகர்மா அறைகளும் உள்ள ஒரு கட்டிடத்தை கட்டினேன். ஸ்வாமிகள் வந்து அவருடைய திருக்கரங்களால் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். அப்பொழுது அந்த மேடையில் ஸ்வாமிகளிடம் நான் பேசும் பொழுது இது மிகப் பெரிய ஸ்தாபனம் அல்ல. இதை தொடங்கியவர் ஒரு தர்மவான், வேதத்திற்காக வாழ்ந்தவர், சத்தியத்தை விடாமல் தொழிலை செய்தவர், உத்தமர், அந்த குலத் தொழிலை நான் செய்ய வேண்டும். உங்கள் திருக்கரங்களால் இது தொடங்கப்பட வேண்டும் என்பது எனது அவா. எனது மருத்துவ வாழ்வு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்காக தான் உங்களை வரவழைத்தேன், வேண்டிக் கொண்டேன் அல்லாமல் என்னிடம் உங்களிடம் காட்டுவதற்கு பெரிய பெரிய கட்டிடங்களோ, எந்திரங்களோ எதுவும் இல்லை என்று கண்ணில் நெகிழ்ச்சியுடன் ஓடினேன். ஸ்வாமிகள் அந்த மரப் பாத்தியைப் பார்த்துவிட்டு பின்பு மருந்து செய்யும் கூடத்தை பார்த்து விட்டு அடியேனுடைய இல்லத்திற்கு வந்து அருள் அமுதை பெற்று கொண்டு பின்பு எங்கள் ஊரில் உள்ள கோவிலையும் பார்வையிட்டார். எங்கள் வீட்டில் இருக்கின்ற ஏணி, திண்ணை போன்ற பழமையான அமைப்பு அவரை மிகவும் கவர்ந்தது. என்னுடைய தாத்தாவின் வாழ்க்கையை அவரிடம் எடுத்துரைத்த பொழுது மகிழ்ச்சியுற்றார். தெரிசனங்கோப்பு கிராமத்தில் இருக்கின்ற திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் மடம் போன்றவற்றை எல்லாம் காண்பித்தப் பொழுது ஒரு காலத்தில் இங்கு சைவம் தழைத்தோங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மதியம் ஒரு மணி அளவில் ஸ்வாமிஜியும் அவருடன் வந்தவர்களும் கிளம்பி போனார்கள். அன்று அவர்கள் பயோனியர் குமாரசாமி வளாகத்தில் “நமது வாழ்வில் இறைவன்” என்ற தலைப்பில் அருள் சொற்பொழிவு ஆற்றினார். ஊருக்கு போகும் பொழுது சீக்கிரம் கோயம்புத்தூருக்கு வா என்று சொன்னார். உடனே சிறிது நாட்களில் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. ஸ்வாமிஜியிடம் இருந்து தனிப்பட்ட கடிதங்களும், வாழ்த்து மடல்களும் எனது தந்தையார் பெயருக்கு வந்தது. திருமணம் ஆன ஒரு வாரத்தில் நான் எனது மனைவியுடன் ஆனைக்கட்டி ஆஸ்ரமத்திற்கு சென்றேன். அன்று தான் முதன்முறையில் ஸ்வாமிகள் முன்னிலையில் எனக்கு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. யார் செய்த புண்ணியமோ ஸ்வாமிஜியின் அருளால் அவர் முன் நன்றாக பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவருடைய இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தன்னுடைய நுண்மான் நுழைப் புலத்தால் எனது சாஸ்திர அறிவையும், அதை தெரிந்து கொள்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் எல்லா கேள்விகளுக்கும் ஸ்லோகங்களை சொல்லி சாஸ்திர பிரமாணம் சொன்னதையும் அவர் மனதில் வைத்துக் கொண்டு உளமாரப் பாராட்டினார். பின்பு எங்கள் இருவரையும் உடனே அமர்ந்து சாப்பிடச் சொன்னார். திருமணம் ஆகி இருக்கிறது இவளை வெளியே கூட்டிக் கொண்டு போய்விட்டு வா என்று சொன்னார். நாங்கள் ஊட்டி போன்ற இடங்களுக்கு எல்லாம் போய்விட்டு மீண்டும் ஆஸ்ரமத்திற்கு வந்தோம். ஐந்து ஆறு வகுப்புகள் அன்று எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்வாமிகள் மெய்மறந்து ரூ. 5001 தட்சிணையாக கொடுத்தார்கள். ஸ்வாமிஜியிடம் நான் பணம் ஒன்றும் வேண்டாம். உங்கள் அருட்பார்வை ஒன்றே போதும் என்று சொன்னதற்கு நீ மேலும் மேலும் வளர வேண்டும் அப்பா, நீ முன்னுக்கு வர வேண்டும் என்று சொன்னார், அதற்குத்தான் இது என்றார். கண்ணீர் ததும்பியது, நெஞ்சம் கனத்தது. யார் செய்வார்கள் இப்படி? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? நான் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன், என்னை விட பெரியவர்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். சாஸ்திரம் படித்து குப்பையில் கிடைக்கின்ற ஒரு கல்லை கூட மாணிக்க கல்லாக மாற்றி கோபுரத்தில் ஊச்சியில் வைக்கின்ற ஒரு சத்குரு அவர். அதற்கு நான் ஒரு உதாரணம்.
2000 ம் ஆண்டில் பரம பூஜ்ய ஸ்வாமி அவர்கள் தான் நடத்தி வருகின்ற அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் சைலோஸ்பெர்க் எனும் இடத்தில் ஒரு ஆசிரமம் இருப்பதாகவும் அங்கு வேதாந்தா, யோகா மற்றும் ஆயுர்வேத வகுப்புகள் நடப்பதாகவும் நீ போகிறாயா? பாடம் சொல்லிக் கொடுக்கிறாயா என்று கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் ஸ்வாமிஜியின் மாணவர்களாகிய திரு. ஜி எஸ் ராமன், திருமதி. கீதா மாமி அவர்களிடம் பழக்கம் இருந்தது. அவர்களது மகள் Dr. பத்மா அவர்கள் நேச்சுரோபதி படித்துவிட்டு என்னிடம் சிறிது ஆயுர்வேதம் கற்றுக் கொண்டிருந்தார். நான் ஸ்வாமிஜியின் வாக்குப்படி விஸாவுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கு முன் லண்டனுக்கு விஸா விண்ணப்பித்திருந்தேன், ஆனால் அது கிடைக்கவில்லை.
ஸ்வாமிஜியின் அருளால் அமெரிக்கா விஸா கிடைத்தது நான் Dr. பத்மா அவர்களுடன் சேர்ந்து சைலோஸ்பர்க் ஆசிரமத்திற்கு சென்றேன். ஒரே பரபரபப்பாக இருந்தது. திருண் கோபால் என்கிற ஆங்கில மருத்துவர் (பெண் நோய் சிகிச்சை நிபுணர்) அந்த குழுவுக்குத் தலைவராக இருந்தார். அதில் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதில் 15 நாட்கள் அவர்களுக்கு ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களை போதிக்கின்ற ஒரு பாக்கியம் எனக்கு ஸ்வாமிஜியின் அருளால் கிடைத்தது. அவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற வகையில் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக பேருரை ஆற்றினேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.
அங்கிருந்து ரோச்சஸ்டர் எனும் ஊருக்குச் சென்று தொடர் வகுப்புகள் நடத்தினேன். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்று டாக்டர். லக்ஷ்மி நடிகிர் அவர்கள் ஏற்பாட்டில் வகுப்புகள் நடத்தினேன். அங்கு திரு. வெங்கி ராமன் எனும் அற்புதமான ஒரு நபரை சந்தித்தேன். பின்பு நியுயார்க்கில் ஒரு இடத்தில் சிறப்பு வகுப்பு நடத்தினேன். பின்பு ஒரு சில இடங்களைப் பார்த்துவிட்டு எனது இரண்டு சித்திகள் வீட்டுக்கும் சென்று விட்டு வந்தேன். அடுத்தமுறை ஸ்வாமிஜி எனக்கும், எனது மனைவிக்கும் டிக்கட் எடுத்துக் கொடுத்தார். மனைவியை அழைத்துக் கொண்டு பல ஆழ்ந்த கட்டுரைகள் பலவற்றை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சிறப்பான வகுப்புகளை நடத்தி முடித்தேன்.
உடல்நிலையும், வயிறும் சற்று பாதித்தது. அங்கிருந்து கனடா சென்று சிவானந்த ஆசிரமத்தில் தொடர் வகுப்புகள் நடத்தினேன். பின்பு இந்தியா வந்து 15 நாட்கள் இருந்தபின்பு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமத்துக்குச் சென்று வகுப்புகள் நடத்தினேன். அதன் பின்பு பத்மா அவர்கள் 25 நேச்சுரோபதி மாணவர்களை ஆயுர்வேதம் படிப்பதற்காக கோயம்புத்தூருக்கு அழைத்து வந்தார்கள். கோயம்புத்தூரில் ஆனைகட்டி அசிரமத்தில் நான், எனது மனைவி, அம்மா மற்றும் அப்பா ஆகியோர்கள் சென்று தங்கியிருந்து 40 நாட்கள் வகுப்புகள் நடத்தினோம். அதன்பின்பு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு தயா என்று பெயரிட்டோம். ஸ்வாமிஜி மிகவும் சந்தோஷமடைந்து ஆஸீர்வதித்தார்கள்.
அதன் பின்பு கோயம்புத்தூருக்கு ஒவ்வொருமுறை செல்லும் போதும் ஸ்வாமிஜி எனக்கு வகுப்பு நடத்துவதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த நாட்களிலெல்லாம் ஸ்வாமிஜியுடன் அமர்ந்து பேசுவதற்கும், உணவருந்துவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஸ்வாமிஜி என்னை ஆயுர்வேதத்தின் Faculty of Arsha Vidya Gurukulam (He is our faculty) என்று ஒருநாள் எல்லோர் முன்னிலையும் சொன்னார்கள்.
ஒரு சில நேரங்களில் நான் மிகவும் நகைச்சுவையாக பேசுவதுண்டு, அதனை ஸ்வாமிகள் மிகவும் ரசித்தார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஆயுர்வேதம் பேசும்பொழுது, ஆயுர்வேதம், தத்துவம், வேதாந்தம் எல்லாம் கலந்து சரகத்தைத் தொட்டு பேசுவதுண்டு. இது ஸ்வாமிஜிக்கு மிகவும் பிடிக்கும். சாஸ்த்திர பிரமாணத்துடன் பேசுவது ஸ்வாமிஜிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு முன்பு பல சிறந்த வைத்தியர்கள் அங்கு போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தார்கள். ஆனால் சாஸ்திரபாடம் என்கின்ற விஷயத்தில் ஸ்வாமிஜிக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அவர்களை விட நான் சிறந்தவன் என்ற எண்ணமல்ல, அவர்களும் சிறந்த மருத்துவர்கள்தான். ஒரு சில ஆங்கில மருத்துவர்களுக்கு ஆயுர்வேதம் என்றாலே பிடிக்காமல் இருந்தது இதை ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் சொன்னபொழுது, அதை விட்டுத் தள்ளிவிட்டு உன் வேலையைப் பாரப்பா என்று சொல்லிவிட்டார். உனக்கு என்னப்பா இப்பொழுது குறை நன்றாகத்தானே இருக்கிறாய் என்று கேட்டார். அது மனதுக்கு மிகுந்த ஆறுதலாகவும், புண்ணுக்கு மருந்தாகவும் இருந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு கருணையான மனிதர். ஒரு முறை ஸ்வாமிஜி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பொழுது ஒரு தன்வந்தரி படத்தைப் பார்த்திருக்கிறார். அங்கிருந்த திருமதி. சந்திரா அம்மாவிடம் அதை வாங்கச் சொல்லி எனக்குப் பரிசளித்தார். அந்த தன்வந்தரி ரங்கநாதனுக்கே வைத்தியம் பார்த்தவர், நீ பூஜையில் வைத்துக்கொள், அபூர்வமான படம் என்று சொல்லி ஸ்வாமிஜி எனக்கு அந்த படத்தை அளித்தார்கள். அதன்பின்பு ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் அவருடைய சேஷ வஸ்திரம் கேட்டு வாங்கினேன். அதையும் சந்திரா அம்மாதான் எடுத்துக் கொடுத்தார்கள். பின்பு எனக்கு மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் எனக்கு உபதேசம் செய்து அறிவுரை வழங்கினார்கள். எனக்கு இடையில் ஒரு சோக மனநிலை ஏற்ப்பட்டது. உனக்கு இந்நிலை வரக்கூடாதேப்பா You do not deserve this என்று சொல்லி எனக்கு ஒரு ருத்ராக்ஷத்தைக் கொடுத்தார்கள். இப்படியெல்லாம் ஸ்வாமிஜி செய்து கொண்டிருக்கின்ற பொழுது நான் எழுதிய 60 புத்தகங்களையும் 16000 பக்கங்கள் கட்டுரைகளையும் ஒலிப்பேழைகளையும் ஸ்வாமிஜியிடம் கொண்டு காண்பித்தபொழுது பிரமித்து போனார்கள். உனக்கு மிகுந்த பாராட்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.
Dr. Vasant Lad அவர்களுக்கு அமெரிக்காவில் கொடுத்தேன். இங்கு உனக்குத் தருகிறேன் என்று சொல்லி மஹா மேதை BKS ஐயங்காருக்கும், எனக்கும், திருப்பரங்குன்றம் ராஜா பட்டருக்கும் ஆர்ஷ குல ச்ரேஷ்டா என்ற விருதினை வழங்கினார்கள். அதில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும், கேடயமும் இருந்தது. அன்று மாலை இசை விற்பன்னர்களாகிய திருவாரூர் பக்தவத்சலம், அருணா சாய்ராம் போன்றவர்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கினார்கள்.
அந்த விருதில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதியிருந்தன. அவையாவன
Arsha Kula Sreshta is being awarded on Dr.
L. Mahadevan for his contribution to teaching
Hindu dharma through Ayurveda the ancient knowledge and authoring authentic
books and practicing Ayurveda என்று 16 நவம்பர் 2014 ல் கையெழுத்திட்டு கொடுத்தார். இதையே ஒரு மிகச் சிறந்த பேறாக நான் கருதுகிறேன். Dr. Vasant Lad மற்றும் பூஜ்யஸ்ரீ BKS Iyyangar அவர்களுக்கும் இந்த விருது கிடைத்துள்ளது.
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து பழைமையான மருத்துவத்தை நான் படித்து போதித்து வருவதை அவர்கள் உணர்ந்து அதை ஆதரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அளித்தார்கள். ஆசிரமத்தில் அனைவருமே அவரை நேசித்தார்கள்.
அவர் கருணையின் பூரண வடிவமாக விளங்கினார்.
தயா என்றால் கருணை என்று
பொருள். யாதேவீ ஸர்வ பூதேஸு
தயா ரூபேண ஸம்சிதா, நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ என்பது
ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிக்கு தான்
பொருந்தும். பலருக்கு தாயாக இருந்தார், பலருக்கும்
அவர் குருவாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.
தாயாய் தந்தையாய் தாங்குகின்ற தெய்வமாய் இருந்தார். ஒப்பாரும் மிக்காரும் இலர் என்று சொல்லக்கூடிய
அளவில் ஆழ்ந்த வேதாந்தப் பாடங்களை
மிக எளிமையாக கற்றுக் கொடுக்கும் ஆற்றலை
அவர் பெற்றிருந்தார். இவரைப் போல் ஆச்சார்யர்கள்,
ஆசிரியர்கள் இனி கிடைப்பார்களா என்பது
சந்தேகமே. 300க்கும் மேற்ப்பட்ட சிஷ்யர்களை உருவாக்கி அவர்களுக்கு சன்னியாசம் வழங்கியுள்ளார். ஸனாதன தர்மத்தின் மேல்
அதீதப் பற்று இருந்தது. தட்சிணாமூர்த்தி
கோவிலில் நடக்கின்ற பூஜை பரம பவித்திரமான
பூஜைக்கு போகும் நேரம் ஒருமுறை
அவர் எனது தாய், தந்தையரைப்
பார்த்து நீங்கள் இங்கு வந்து
இருங்கள் என்று கூறினார். ஒருமுறை
நான் வாழைப்பழம் வாங்கிச் சென்ற பொழுது
அவர் ஆப்பிளை கையில் எடுத்து
பிரஸாதமாக கொடுப்பதற்கு இது தான் சிறந்தது
என்று சொன்னார். மிகுந்த நகைச்சுவை தன்மை
உடையவர், ஆழ்ந்த வேதாந்தக் கருத்துக்களை
நகைச்சுவைத் தன்மையுடன் சொல்வார். ஆதிக் கால சொற்பொழிவுகளில்
வேகம் கொப்பளிக்கும். துடிப்பான ஒரு பேச்சாளர். நிறைய
சாத்திராலயங்களை கட்டி மாணவர்களுக்கு வாழ்வு
அளித்தார். சாதிப் பாகுபாடு கிடையாது.
எல்லோரும் அவருக்கு ஒன்று தான். பாடம்
சொல்லிக் கொடுப்பதில் பாகுப்பாடு கிடையாது. படிக்க ஆசை இருந்து
தகுதியிருந்தால் அவன் மாணவன் தான்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் சமஸ்கிருதத்தைப் படித்து, பாணினியைப் படித்து, வேதாந்தத்தைப் படித்து, ஸ்ரீமத் பகவத்கீதையைப் படித்து
இருக்கிறார்கள் என்றால் அது ஒரு
சாதாரணமான விஷயமாக சொல்ல முடியாது.
அப்பேர்ப்பட்ட
மகானின் பூத உடல் இன்று
நம்முடன் இல்லை ஆனால் மணிக்கூர்
கணக்கான ஒலிப்பேழைகள், புத்தகங்கள், பாட முறைகள், நற்கருத்துக்
கோப்புகள் எல்லாம் உள்ளன. அவற்றை
கேட்டு படித்து அனுசரித்து வாழ்ந்து
சேவை செய்து அவருடைய புகழுக்கு
களங்கம் வராதபடி நடந்து கொண்டு
அவரை அனுதினமும் நினைத்து வணங்கி வாழ்வதே நாம்
அவருக்கு செய்யும் தொண்டாகும். “வாழ்க நீ எம்மான்”
என்ற பாரதி பாடினாரே இதைப்
போல என்றுமே அவர் நம்முடன்
வாழ்கிறார். பிறப்பு இறப்பு என்பது
ஒரு வாழ்வினில் நடக்கும். மரணம் என்பதே ஞாபக
தொடரில் வரும் ஒரு முறிவு போல தான். அவர் மரணத்தைப்
பற்றியும் பேசியிருக்கிறார். அவருடைய கடோப உபநிஷத்
தொகுப்புகளை கேட்டால் அதைப் பற்றி புரியும்.
தாள் தந்து அளிக்கும் தலைவனே
சற்குரு
தாள் தந்து தன்னை அறியத்
தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச்
சார் சீவன்
தாள் தந்து பாசம் தணிக்கும்
அவன் சத்தே.
என்கிறார்
திருமூலர்.
நமது குருநாதர் சத்குரு தயானந்த ஸ்வாமிகளின்
திருவடி, அருளனுபவத்தைத் தரும் திருவடியாகும். இது
தன்னை அறியச்செய்யவல்லது, பரம்பொருளையும் அறியச் செய்ய வல்லது.
கறுத்த
இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து
இரும்பு ஆகா வகை அது
போலக்
குறித்த
அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப்
பிறவியில் வந்து அணுகானே.
என்கிறார்
திருமூலர்.
இரும்பு
இரச வேதியில் பொன்னானால், மீண்டும் இரும்பு ஆகாது. அதுபோல,
ஆன்மா பக்குவம் பெறும்பொழுது, குருவின் அருளைப் பெற்றால், மீண்டும்
பிறவாது.
நமது குருநாதர்
நேயத்தே
நிற்கும் நிமலன்
மலம் அற்ற நேயத்தை நல்க
வல்லோன்
நித்தன்
சுத்தன்
என்பது
உண்மை
பிறப்பாலும்,
இறப்பாலும் மாறாத ஒரு நிலையை
புரிந்து அறிந்து தெரிந்து வாழ
அவர் காட்டிய வழி பெரிய
வழியாகும்.
நான் 15 நாட்களுக்கு முன்பு அவரை ரிஷிகேசத்தில் சந்தித்தபொழுது நன்றாக இருப்பா என்று கூறினார்.
அவர் எனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நினைத்துப் பார்க்கின்ற பொழுது யசோதர காவியத்தில்
படித்த மாயனில் குணக்குன்றென்ன மாதவன்
இறைவன் வந்தான் என்ற பாடலும், கம்பனின்
அருந்தவ முனிவரோடிருந்த குன்று போல் குணத்தான்
என்ற வரிகளும் என்னுள் நினைவுக்கு வருகிறது.
அவர் செய்த உதவியை நினைக்கும்
போது
பயன் காரணத்தைக் குறியாமல் பரிந்து காலத்தால் செய்த
நயஞ்சேர்
நன்றி சிறிதேனும் நாடின் அதற்கோர் அளவில்லை
பயன் காரணத்தைக் குறித்தினையும் பதத்திற் புரிந்த நன்றியையும்
வியன் பூதலத்தில் பெரிதாக விரும்பி மதித்தல்
வேண்டுமானால்.
என்ற வரிகளும் நினைவுக்கு வருகின்றன. ஆதலால் அவரை வணங்கிப்
போற்றுவோம்.
ராமாயணம்
கிஷ்கிந்தா காண்டத்தில் செய்நன்றி அறிதலைப் பற்றி ஒரு பாடல்
சிதைவகல்
காதற் றாயைத் தந்தையைக் குருவைத்
தெய்வப்,
பதவி அந்தணரை யாவைப் பாலரைப்
பாவைமாரை,
வதைபுரி
குநர்க்கும் உண்டா மாற்றலா மாற்றன்
மாயா,
உதவிகொன்றார்க்கென்றேனும்
ஒழிக்கலாம் உபாய முண்டோ”
(கம்ப.கிட்கிந்தை. 62)
என்ற வரிகள் மூலம் அவர் எனக்கு செய்ததை நினைவுகூர்கிறேன்.
இப்படிக்கு
Dr. L. மகாதேவன்